May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

உடலுக்கு குளுமை தரும் வாழை நார் சேலைகள்

தமிழகத்தின் மிக முக்கியமான பணப் பயிர்களில் வாழையும் ஒன்று. புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் சில நேரங்களில் நஷ்டம் ஏற்பட்டாலும் கூட, பெரும்பாலும் நல்ல வருமானம் தரக்கூடியது. வாழை என்றால் உடனே நினைவுக்கு வருவது வாழைப்பழம் தான் என்றாலும் இலை, காய், பூ, தண்டு என வாழையின் எந்த ஒரு பாகமும் வீண் போவதில்லை. அதன் அனைத்துப் பாகங்களும் ஏதோ ஒரு வகையில் பயன்படுத்தப்படுகின்றன. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு காரணமாக நிலம், நீர், காற்று மாசு ஏற்படாத பொருட்களுக்கு மவுசு கூடி வருகிறது. தற்போது வாழை நார் மூலம் பல்வேறு வகையான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. வாழை நாரிலிருந்து அலங்காரத் தொப்பிகள், கூடைகள், பாய்கள், மிதியடி, திரைச்சீலைகள் போன்ற பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் வாழை நார்கள் தண்ணீரின் மேல் மிதக்கும் எண்ணெயை அதிக அளவில் உறிஞ்சும் தன்மை கொண்டுள்ளதால் வாழை நார்களைப் பயன்படுத்தி கடலில் கலக்கும் எண்ணெயை எளிதில் பிரிக்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

வாழை நார் புடவைகள்
வாழை நார் சேலை என்பது இப்போது வந்த புது மாடல் இல்லை. இலங்கையில் ராவணன் சீதா தேவியைக் கடத்தி வைத்திருந்தார். ராவணன் தரும் சேலையை அணியக்கூடாது என்று நினைத்த சீதா தேவி, வாழை மரத்தில் உள்ள நாரை எடுத்து சேலை நெய்ததாகக் கூறப்படுகிறது. அனைத்து வகையான வாழை நாரை வைத்து புடவையை உருவாக்குவது கடினம். செவ்வாழை, நேந்திரம் வகை வாழைநார்களே இதற்கு ஏற்றவை.

நார் பிரித்தெடுத்தல்
வாழையின் தண்டுப் பகுதியை அறுவடை செய்தப் பின்னர், 48 மணி நேரத்தில் நார் பிரித்தெடுத்தல் நடை பெற வேண்டும். வாழை நார் பிரித்து எடுக்க இயந்திரம் உள்ளது. எட்டு மணி நேரத்தில் 30 கிலோ வாழை நார் பிரித்து எடுக்க முடியும். ஒரு மாதத்தில் இருந்து 300 கிராம் நார் பிரித்து எடுக்க முடியும்.

வாழை நூல் உற்பத்தி
• வாழை மட்டை நார் எடுக்கும் போது சிறு, சிறு நூலாக இருக்கும். அவற்றைத் தண்ணீரில் ஊறவைத்து சீப்பு வைத்துக் கோதி விடவேண்டும்.
• நாரின் இரு முனைகளிலும் கயிற்றில் கட்டி வைக்க வேண்டும்.
• 2 குடம் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் 100 கிராம் தேவைப்படும் கலர் சாயப்பொடி ஒரு கிலோ உப்பு சேர்த்து சாயம் உருவாக்க வேண்டும்.
• ஐந்து நிமிடங்கள் கட்டப்பட்ட நாரில் ஊற வைக்கவும்.
• சாயம் ஏற்றப்பட்ட நார் அரை மணி நேரம் உலர வைத்து நூலாகப் பிரிக்க வேண்டும்.
• பின்னர் நமக்கு தேவையான பொருட்களை வாழை நூலில் இருந்துத் தயார் செய்து கொள்ள முடியும்.

வாழை நாரால் தயாரிக்கப்படும் புடவைகள் எடை குறைவாகவும், மிருதுவாகவும், அதிக ஈரத்தன்மை உறிஞ்சும் தன்மை கொண்டவையாகவும் உள்ளன. இதனால் வாழைநார் புடவைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.வாழை நாருடன், பருத்தியையும் கலந்து தயாரிக்கப்படும் புடவைகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக உள்ளது.பருத்திப் புடைவையை நெய்வதற்கு ஒரு நாள் தேவைப்படும் என்றால், வாழை நார்ப் புடவையை நெய்வதற்கு மூன்று நாட்கள் தேவைப்படுகிறது. இவ்வகையான ஆர்கானிக் சேலைகள் உடல் சூட்டைக் குறைத்து குளுமையாக வைத்திருக்க உதவுகின்றன.வாழை நார்ப் புடவைகள் இணையத்திலும் கிடைக்கின்றன.

தகவல் : சீனு.சரண்யா, ப.வ.சிந்து, நான்காம் ஆண்டு இளங்கலை வேளாண்மையியல், அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி.

Spread the love