January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

உடுமலை வட்டாரத்தில் அங்ககப்பண்ணையில் இயக்குநர் ஆய்வு

திருப்பூர், டிச.24

தொன்று தொட்டு பாரம்பரியமாக நம் முன்னோர்களால் பின்பற்றப்பட்டு வந்த நமது விவசாயம் உற்பத்தி அதிகரிப்பு என்பதை முன்னெடுத்து அதிகளவு இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தியதன் விளைவு மண் மலடாகி, விளை பொருட்களிலும் பூஞ்சு என எஞ்சியது தான் மிச்சம் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இன்றைய இளம் தலைமுறையினரின் இயற்கை விளை பொருட்களுக்கான தேடல் விவசாயிகளை இரசாயன பயன்பாட்டிலிருந்து தவிர்த்து இயற்கை வழி விவசாயம் நோக்கி கவனத்தை திருப்ப காரணமாக உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளும் தற்பொழுது இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருவது விவசாயிகளிடையே மேலும் நம்பிக்கையை இயற்கை விவசாயம் பற்றி அளிக்க துவங்கியுள்ளது.

உடுமலை போடிபட்டியில் மருத்துவராக பணியாற்றி வரும் பாலசுப்பிரமணியன் என்பவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இரசாயன உரம், பூச்சிக்கொல்லி எதுவும் பயன்படுத்தாமல் இயற்கை வழி விவசாயம் செய்து வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவரது அங்ககப்பண்ணையை கோவை, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர், சுப்பையா, ஆய்வு செய்தார்.
அப்பொழுது அவர் கூறியதாவது, உடுமலை வட்டாரத்தில் இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் ஆர்வமாக உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மருத்துவராக உள்ள இந்த அங்ககப்பண்ணை விவசாயி கடந்த 25 வருடங்களாக அங்கக வேளாண்மை செய்து வருகிறார். தென்னையுடன் ஊடுபயிர்கள் சாகுபடி செய்துள்ளதால் வருமானம் அதிகரிக்க ஏதுவாக உள்ளது. விவசாயிகள் ஒருங்கிணைந்து விவசாயிகள் உற்பத்தியாளர் குழு அமைத்து செயல்பட்டால் இயற்கை விளைபொருட்கள் மற்றும் அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்ட விளைபொருட்களுக்கான விற்பனை வாய்ப்பும், அதற்கான விற்பனை விலை அதிகமாகக் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

இயற்கை வேளாண் முறையை பின்பற்றுவதால் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை பல்கி பெருகுவதால், மண்ணின் அங்ககக் கரிமச்சத்து அதிகரிக்கிறது. இதனால் மண்ணில் உள்ள சத்துக்கள் எளிதாக பயிருக்குக் கிடைக்கிறது. தென்னை மரங்களில் இரு வரிசைகளுக்கிடையே குழி எடுத்து தென்னை மரக்கழிவுகளான தென்னை மட்டை, உரிகாய் மற்றும் அனைத்து தாவரக் கழிவுகளையும் உள்ளே போடுவதால் அது மக்கி இயற்கை உரமாக பயிருக்குக் கிடைப்பதுடன், மண்ணிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் மற்றும் மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இரசாயன இடுபொருட்களுக்கான செலவு இல்லாததால் வருவாயும் விவசாயிக்கு அதிகமாகக் கிடைக்கிறது.

இது குறித்து மருத்துவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது, நான் எனக்கு சொந்தமான 27 ஏக்கர் நிலத்தில் தென்னையில் ஊடுபயிராக ஜாதிக்காய், பாக்கு, எலுமிச்சை, நார்த்தங்காய் பயிரிட்டுள்ளேன். மேலும் 10 நாட்டு மாடுகள் வளர்த்து வருகிறேன். எனது தனிப்பட்ட விருப்பதாலும், நுகர்வோருக்கு நஞ்சில்லா உணவு வழங்க வேண்டும் என்ற ஆர்வத்தினாலும் இரசாயனமற்ற இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். அங்ககச்சான்று துறையினரின் வழிகாட்டுதலினால் அங்ககச்சான்று பெற்றுள்ளேன். அங்கக விளைபொருட்களுக்கான சந்தைப்படுத்துதல் மற்றும் கூடுதல் விலை விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது என அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது விதை ஆய்வு துணை இயக்குநர் வெங்கடாச்சலம், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் பி.ஆ.மாரிமுத்து மற்றும் விதைச்சான்று துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Spread the love