October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

உணவு பதப்படுத்துதல் பயிற்சி மற்றும் அறுவடை பின்சார் தொழில்நுட்ப கருத்தரங்கு

தேனி, அக்.8

தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில், நபார்டு வங்கியுடன் இணைந்து, பண்ணை மேம்பாட்டு நிதி திட்டத்தின் மூலமாக நான்கு திட்டங்கள் மற்றும் ஐந்து திறன் மேம்பாட்டு பயிற்சிகளை விவசாயிகளுக்கு நடத்தப்பட்டது.

பண்ணை மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் குறுந்தொழில் நிறுவன மேம்பட்டு திட்டத்தில் – உணவு பதப்படுத்துதல் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் இரண்டு ஆராய்ச்சி நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது மற்றும் அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. மேலும் திராட்சை, கரும்பு மட்டும் வெற்றிலை பயிர்களுக்கு உழவர் உற்பத்தியாளர் குழு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் தொழிற்சாலை நிறுவனங்களை நிறுவி விவசாயிகளுக்கு, கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் அதிகரிக்க திட்டங்கள் செயல்படுத்தபட உள்ளது.

இது தொடர்பாக சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் சேர்மன் முனைவர் பெ.பச்சைமால், நபார்டு வாங்கி மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி கூறி வரவேற்புரை வழங்கினார். தேனி மாவட்ட நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் பி.சசிகுமார், தேனி மாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் வழங்கக்கூடிய திட்டங்களான கிராமிய குடிநீர் திட்டம், உழவர் உற்பத்தியாளர் கம்பெனி போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் டி.வேங்கட கிருஷ்ணா, விவசாயிகளிடம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் மேற்கொள்ளும் வேளாண் வணிக நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்து, வங்கி மூலம் வழங்கக்கூடிய சேவைகளை விவசாயிகள் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முக்கியத்துவத்தை பற்றி விரிவாக கூறினார். மேலும், நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை கண்காட்சிகள் மூலமாக காட்சியளிக்கப்பட்டது.

தொடர்ந்து நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் டி. வேங்கட கிருஷ்ணா, சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார். மேலும் வேளாண் அறிவியல் மையத்தின் மாதிரி செயல் விளக்க பண்ணைகளை பார்வையிட்டு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். எதிர் காலத்தில் நபார்டு வங்கியுடன் இணைந்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ளுமாறு அறிவுரை கூறினார். இறுதியாக மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் பொ.மகேஸ்வரன் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுபெற்றது.

Spread the love