கோவை, ஆக. 4
நல்விதை, நல் உரம், நற்காப்பு, இம்மூன்றும் விளைச்சலின் முக்கிய காரணியாகும். சான்று விதை உற்பத்தி பணியில் ஈடுபட்டு வரும் கோயமுத்தூர் மாவட்ட அனைத்து உதவி விதை அலுவலர்களுக்கு, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையின் மூலம் தரமான சான்று விதை உற்பத்தி நடைமுறைகள் குறித்து ஒரு நாள் பயிற்சி 2.8.22 அன்று கோவை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இப்பயிற்சிக்கு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சை.நர்கீஸ் தலைமை தாங்கி நடத்தினார். இப்பயிற்சியில் விதை உற்பத்திக்கு விவசாயிகளை தேர்வு செய்வது, விதைப்பண்ணை பதிவு செய்வது, இரகங்களை தேர்வு செய்வது, வயல் ஆய்வு செய்தல், கலவன்கள் அகற்றுதல், விதை சுத்தி செய்தல், விதைச்சான்று செய்தல், சான்று செய்த விதைகளை கிடங்குகளில் சேமிப்பது போன்ற அனைத்து விதைச்சான்று நடைமுறைகள் குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் விதை நேர்த்தியின் முக்கியத்துவத்தை விவசாயிகளுக்கு எடுத்துரைக்கவும் விதைப்பண்ணை அமைக்கும் போது கட்டாயமாக விதை நேர்த்தி செய்திடவும் அறிவுறுத்தப்பட்டது.
இத்துடன் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள 56 கிராமங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, விதை உற்பத்தி செய்திடவும், விதைப்பண்ணையில் தகவல் பலகைகள் அமைத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.