October 23, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

உரங்களை அதிக விலைக்கு விற்றால் உரக் கட்டுப்பாட்டு ஆணையின்படி நடவடிக்கை

புதுக்கோட்டை, அக்.6

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிருக்குத் தேவையான உரங்கள் அனைத்தும் இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவுவி ற்பனை நிலையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது எனவும், உர விற்பனையாளர்கள் அதிகபட்ச விலைக்கு மேல் விற்பனை செய்யக் கூடாது எனவும், மீறும் உர விற்பனையாளர்களின் உர விற்பனை உரிமம் இரத்து செய்யப்படும் எனவும் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதைத் தொடர்ந்து விவசாயிகள் சம்பா சாகுபடிப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சம்பா சாகுபடிக்குத் தேவையான உரங்கள் அனைத்தும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போது யூரியா 3520 மெட்ரிக் டன்களும், டி.ஏ.பி 862 மெட்ரிக் டன்களும், பொட்டாஷ் 971 மெட்ரிக் டன்களும், காம்ப்ளக்ஸ் 2707 மெட்ரிக் டன்களும் மாவட்டத்திலுள்ள உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் உரம் வாங்கச் செல்கையில் தங்களின் ஆதார் அட்டையைக் கொண்டு உரம் வாங்கிப் பயன்படுத்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 45 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை யூரியாவின் அதிகபட்ச விற்பனை விலை 266.50 ரூபாய் மட்டுமே. மேலும், உர விற்பனையாளர்கள் உர உரிமத்தில் அனுமதி பெற்ற உர நிறுவனங்களின் உரங்களை மட்டுமே விற்பதுடன், உரம் விற்பனை செய்ய அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே விற்க வேண்டும். ஆகவே, சில்லறை உர விற்பனையாளர்கள் அதிகபட்ச விற்பனை விலைக்குக் கூடுதலாகவோ யூரியா உரத்துடன் வேறு ஏதேனும் இடுபொருட்களைக் கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு விற்பனை செய்தாலோ, அனுமதிக்கப்படாத உர நிறுவனங்களின் உரங்களை விற்பனை செய்தாலோ உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

இது தொடர்பான புகார்களுக்கு அந்தந்த வட்டாரங்களில் அமைக்கப்பட்டுள்ள உரக் கண்காணிப்பு மையத்தினையும், புதுக்கோட்டை மாவட்டத் தரக்கட்டுப்பாட்டு வேளாண்மை உதவி இயக்குநரின் 90807 09899 அல்லது 04322-221666 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love