August 13, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

உளுந்து சாகுபடியில் விதை தேர்வு, விதைப்பு முறைகளை கடைப்பிடிக்க அறிவுரை

வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

செங்கல்பட்டு, ஜூலை 21

செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் உளுந்து பரவலாக பயிரிடப்பட்டு வருகிறது. உளுந்து பயிரிடுவதால் தழைச்சத்தை வளிமண்டலத்திலிருந்து கிரகித்து மண் வளத்தை மேம்படுத்துகிறது. தொடர்ச்சியாக மூன்று போகங்களும் நெல் பயிரிடுவதால் மண்ணின் வளம் சமநிலையற்றுப் போகும் நிலை ஏற்படுகிறது. எனவே பயறு வகை பயிர்களை பயிர் செய்வதால் மகசூல் கிடைப்பதுடன், மண் வளமும் பாதுகாக்கப்படுகிறது. எனவே ஆடிப்பட்டதில் உளுந்து பயிரிடவிருக்கும் விவசாயிகள் கீழ்கண்ட விதை தேர்வு மற்றும் விதைப்பு முறைகளை கடைப்பிடுக்குமாறு வேளாண்மை இணை இயக்குநர் முனைவர் எல்.சுரேஷ், கேட்டுக் கொண்டார்.

ஆடிப்பட்டத்தில் விதைக்க விபிஎன் 8, விபிஎன் 10, விபிஎன் 11, விபிஎன் (Bg) 4, விபிஎன் (Bg) 5, TNAU (Black gram) விபிஎன் 7 அகிய இரகங்கள் ஏற்றதாகும். ஏக்கருக்கு 8 கிலோ உளுந்து விதை தேவைப்படுகிறது. ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் 10 கிராம் கொண்டு விதைநேர்த்தி செய்து விதைக்கலாம் அல்லது கார்பென்டாசிம் அல்லது திரம் 2 கிராம், ஒரு கிலோ விதையுடன் கலந்து 24 மணி நேரத்திற்கு பின்னர் விதைக்க வேண்டும். பயனுள்ள ரைசோபியம் பாக்டீரியாக்களை பூசண மருந்து கலந்த விதையுடன் கலக்க கூடாது. ட்ரைக்கோடெர்மா அல்லது சூடோமோனாஸ் கலந்த விதையுடன் பயனுள்ள பாக்டீரியாக்களை கலந்து விதைக்கலாம்.

எனவே, விவசாயிகள் ஆடிபட்டத்திற்கு தங்களுக்கு தேவையான உளுந்து விதைகளை அந்தந்த வட்டார வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி விதைகளை பெற்று பயன் பெறுமாறு வேளாண்மை இணை இயக்குநர் முனைவர் எல்.சுரேஷ் கேட்டுக்கொண்டார்.

Spread the love