June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

உளுந்து, பச்சைப் பயிர் குறைந்த பட்ச ஆதரவு விலையில் கொள்முதல்

சென்னை, ஏப்.9

உளுந்து மற்றும் பச்சைப்பயிரையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் பயறுவகை சாகுபடியினை ஊக்குவித்து, பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலம் பயறு உற்பத்தியினை அதிகரிப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உற்பத்தி மட்டுமல்லாது. பயறு வகை சாகுபடி உயர்வு செய்யும் விவசாயிகளுக்கு நல்ல இலாபகரமான விலை கிடைக்கவும் அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பயறு அறுவடைக் காலங்களில் ஏற்படும் விலை வீழ்ச்சியினால் நியாயமான விலை கிடைக்காமல் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர். எனவே, கடந்த 2021-22 ஆம் ஆண்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தவாறு, பயறு சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையில் பயறு வகைகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக அரசு கொள்முதல் செய்து உதவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் உளுந்து, பச்சைப்பயறையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்திட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பச்சை பயிறு

அதன்படி, தமிழகத்தில் அரியலூர், ராணிப்பேட்டை தேனி, கரூர், செங்கல்பட்டு, திருப்பூர், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை ஆகிய 23 மாவட்டங்களில் உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகளிடமிருந்து 57,350 மெட்ரிக் டன் உளுந்துப் பயறை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, உளுந்து குறைந்தபட்ச ஆதரவு விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.63 வழங்கப்படும். அதேபோன்று, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருப்பூர், சேலம், நாமக்கல், விருதுநகர், திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி. தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 15 மாவட்டங்களில் பச்சைப்பயறு சாகுபடி செய்துள்ள விவசாயிகளிடமிருந்து 14,282 மெட்ரிக் டன் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதற்கும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பச்சைப்பயறுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.72.75 வழங்கப்படும்.

இத்திட்டத்திற்கு தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம், மாநில இணைப்பு முகமையாகவும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் பிரதான கொள்முதல் நிலையங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. நாஃபெட் நிறுவனம் ஒன்றிய கொள்முதல் முகமையாகவும் செயல்படுகின்றது. கொள்முதல் செய்யப்படும் பயறு வகைகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இருப்பதை விவசாயிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் அருகில் உள்ள கொள்முதல் நிலையங்களை அணுகி நிலச் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களுடன் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகளின் விளைபொருட்களுக்கான தொகை சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்ட மூன்று நாட்களுக்குள் அவர்களது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.

எனவே, பயறு வகை விவசாயிகளுக்கு இலாபகரமான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுமாறு பயறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வாழைப்பழம் மற்றும் பேபி கார்ன் ஏற்றுமதி
புது தில்லி, ஏப்.9

இந்திய வாழைப்பழம் மற்றும் இளம் சோளத்திற்கான (பேபி கார்ன்) சந்தை அணுகல் குறித்து இந்தியா மற்றும் கனடாவின் தேசிய தாவர பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் மூலம் இப்பொருட்களுக்களை கனடா சந்தைக்கு அனுப்ப வாய்ப்பு கிடைத்துள்ளது.

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் மனோஜ் அஹுஜா மற்றும் கனடா தூதர் கேமரூன் மெக்கே ஆகியோருக்கிடையே 7.4.22 அன்று நடைபெற்ற கூட்டத்தில், தாவர இறக்குமதிக்கான உள்நாட்டு தேவைகளைப் புதுப்பிக்கப்பட்ட பிறகு, இந்தியாவில் இருந்து கனடாவுக்கு பேபி கார்ன் ஏற்றுமதி 2022 ஏப்ரல் முதல் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், வாழைப்பழம் குறித்து இந்தியா வழங்கிய தொழில்நுட்பத் தகவல்களின் அடிப்படையில், அதை உடனடியாக ஏற்றுமதி செய்வதற்கு கனடா ஒப்புதல் அளித்துள்ளது.

கனடா அரசின் இந்த முடிவு, இந்தப் பயிர்களை வளர்க்கும் இந்திய விவசாயிகளுக்குப் பெரிதும் பயனளிக்கும், மேலும் இந்தியாவின் ஏற்றுமதி வருவாயையும் அதிகரிக்கும்.

Spread the love