June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

உளுந்து பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை

சிவகங்கை, ஜூன் 6

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டாரத்தில் வேளாண்மைத்துறை (அட்மா) விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டு உளுந்து பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து 31.05.2022 அன்று சாத்தனி கிராமத்தில் காளையார்கோவில், வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.என்.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் விவசாயிகளுக்கு உளுந்துபயிரில் நிலத் தேர்வுகளை கட்டுப்பாடு மற்றும் நீர் நிர்வாகம் குறித்து விரிவான முறையில் எடுத்துக் கூறினார்.

நிலம் தயாரித்தல் : நிலத்தின் தன்மைக்கு ஏற்றவாறு மண் நன்றாக கட்டிகள் இல்லாதவாறு 3-4 உழவுகள் போட வேண்டும்.

அடியுரம் : ஒரு டன் ஊட்டமேற்றிய தொழுவுரம் போட வேண்டும். இத்துடன் 30 கிலோ டி.ஏ.பி உழவுசால் மூலம் ஒரு ஏக்கருக்கு போட வேண்டும்.

உயிர் உரம் : ரைசோபியம் 2 கிலோ பாஸ்பொபாக்டீரியா 2 கிலோ மக்கிய தொழுஉரம் 50 கிலோ வயலில் ஈரம் இருக்கும் பொழுது போட வேண்டும்.
இரகங்கள் : வம்பன் 1, 2, 3 மற்றும் 5

கோ 5 : இதன் வயது 70-75 நாட்கள் மானாவாரியில் எக்டருக்கு 740 கிலோ மகசூலும் இறவையில் என்டருக்கு 1250 கிலோ மகசூலும் தரும். இந்த இரகம் அடர்த்தியாக வளரும் சாம்பல் மற்றும் இலை நெளிவு நோய்கள் காய் துளைப்பான் போன்ற பூச்சி தாக்குதலை ஒரளவு தாங்கி வளரும் இந்த இரகம் திருநெல்வேலி, தூத்தக்குடி, திண்டுக்கல், மதுரை, தேனி, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஆடிப்பட்டத்தில் பயிரட ஏற்றது.

நீர் நிர்வாகம் : விதைத்தவுடன் ஒரு தண்ணீரும் பிறகு உயிர்த் தண்ணீர் மூன்றாவது நாளிலும் பாய்ச்ச வேண்டும். கால நிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்ட வேண்டும் பயிரின் எல்லா நிலைகளிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் துளிர்க்கும் பருவத்தில் வறட்சி இருந்தால் 0.5 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை இலைகளில் தெளிக்க வேண்டும்.

களை கட்டுப்பாடு : எக்டருக்கு பென்டிமெத்தலின் 20லிட்டர் கைத்தெளிப்பான் மூலம் 500 லிட்டர் தண்ணீருடன் விதைத்த மூன்றாவது நாள் தெளிக்கவேண்டும். இதன் மூலம் விதைத்தலிருந்து 30 நாட்களுக்குள் களைகளை கட்டுப்படுத்தலாம். விதைத்த 30 நாட்களுக்கு பின்னர் கைகளை ஒரு முறை அப்புறப்படுத்த வேண்டும் என்று விரிவான முறையில் எடுத்துரைத்தார். மேலும் இப்பயிற்சியில் கல்லல் சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லுரி உதவி பேராசிரியர் முனைவர் ஞானஅருள் சாமுவேல் ராஜன், விவசாயிகளுக்கு பயிறு வகைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உளுந்தின் நுண்ணூட்ட பொருள் கொண்டு சிக்கனமாக விதை நேர்த்தி செய்தல் மற்றும் உயிர் உரங்கள் மற்றும் துத்தநாகம் மாலிப்டினம் மற்றும் கோபால்ட் போன்ற நுண்ணூட்டச் சத்துக்கள் கொண்டு விதைக்கு மேல் பூச்சு செய்யலாம். ஒரு கிலோ விதைக்கு 0.5 கிராம் பயன்படுத்த வேண்டும்.

பயறு வகை பயிர்களுக்கு தழைச்சத்துக்கு மாற்றாக உயிர்ம ஆதாரங்கள் : 50 சதவிகித நைட்ரஜனுக்கு மாற்றாக உயிர்ம ஆதாரம் (ஏக்கருக்கு 850 கிலோ மண்புழு உரம்) பயறு வகை பயிர்களில் கார அமில தன்மை 6.0க்கும் குறைவான மண்ணில் சுண்ணாம்பு அளிப்பது பரிந்துரைக்கப்படுகிறது.
பயிர் மேலாண்மை நில மேம்பாடு : நில மேம்பாட்டிற்க்கு ஒரு எக்டருக்கு சுண்ணாம்புக்கல் 2 டன் மற்றும் தொழு உரம் 12.5 டன் அல்லது மக்கிய தென்னைநார் கழிவு 12.5 டன் இட வேண்டும்.
நுண்ணுரம் : ஒரு ஏக்கருக்கு பயறு வகை நுண்ணுரம் 2 கிலோவை 20 கிலோ மணலுடன் கலந்து விதை நடவு செய்த 15 நாட்களுக்குள் வயலில் ஈரம் இருக்கும் பொழுது தூவிட வேண்டும்.
உரமிடுதல் : மானாவாரி பயிருக்கு அடியுரமாக ஒரு எக்டருக்கு 12.5 கிலோ தழைசத்து 25 கிலோ மணிச்சத்து 12.5 கிலோ சாம்பல் சத்துமற்றும் 10 கிலோகந்தகசத்து இட வேண்டும்.
குறிப்பு : மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரம் மூலம் இடவில்லை எனில் ஜிப்சம் மூலமாக கந்தகச்சத்து இட வேண்டும்.

மேலும் இப்பயிற்சியில் வட்டார தொழில் நுட்ப மேலாளர் கோகிலா உயிர் உரங்களின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறை பற்றி அட்மா திட்டத்தில் செயல்படுத்தி வரும் செயல்விளக்கம் விவசாயிகளுக்கான உள் மற்றும் வெளிமாவட்ட மற்றும் மாநில அளவிலான பயிற்சிகள் மற்றும் உயிர் உரங்களை பயன்படுத்தி மண்ணின் வளத்தை பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாயர் காளீஸ்வரி செய்தார். மேலும் பயிற்சியில் உதவி விதை அலுவலர் புவனேந்திரன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் சுதா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Spread the love