தூத்துக்குடி, மே 6
உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க வேளாண் துறை வழிகாட்டுதலை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டுமென புதூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோகிலா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : தூத்துக்குடி மாவட்டம், புதூர் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து பயிர் நன்கு வளர்ந்து பூ மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் உள்ளது. இந்நிலையில் உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் பாதிப்பு காணப்படுகிறது. இந்த நோய் வெள்ளை ஈ என்ற பூச்சியின் மூலம் பரவுகிறது. இந்நோய் தாக்குதலின் அறிகுறிகளாக இளம் இலைகளில் ஆங்காங்கே மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றும். முடிவில் இலை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறிவிடும். இதனால் நோய் தாக்கப்பட்ட செடிகளில் மிகக் குறைந்த அளவு பூக்கள் மற்றும் காய்கள் உற்பத்தி செய்தல் போன்ற குறைபாடுகள் ஏற்படும். இதனால் 50 முதல் 70 சதவீதம் வரை மகசூல் குறைய வாய்ப்பு உள்ளது.
இந்நோயைக் கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்.எல். 200 மி.லி. அல்லது டைமீத்தோயேட் 30 இசி 500 மி.லி. அல்லது தையோமீத்தாக்ஸம் 75 டபிள்யூ.எஸ். 100 கிராம் என்ற அளவில் தெளித்து உளுந்து பயிரில் மகசூல் இழப்பை தடுக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.