திருவாரூர், ஜூன் 13
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் வட்டாரங்களில் சித்திரை பட்டத்தில் சாகுபடி செய்துள்ள உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் பாதிப்பு ஆங்காங்கே காணப்படுவதாக திருவாரூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககசான்று உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இந்நோயினால் பாதிக்கப்பட்ட உளுந்துப் பயிரின் இளம் இலைகளில் ஆங்காங்கே மஞ்சள் நிறபுள்ளிகள் ஆரம்பத்தில் தோன்றும். புதிதாக தோன்றும் இலைகளில் ஒழுங்கற்ற மஞ்சள் மற்றும் பச்சைத் திட்டுக்கள் மாறிமாறிகாணப்படும். புள்ளிகள் அளவு அதிகரித்து முடிவில் இலை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி விடும். இது ஒரு வைரஸ் நோய் ஆகும். வெள்ளை ஈக்களால் நோய் தொற்று பரவுகிறது. மஞ்சள் தேமல் நோய் தாக்குதலை தாங்கி வளரக் கூடிய வம்பன் 6, வம்பன் 8, வம்பன் 10 மற்றும் வம்பன் 11 போன்ற உளுந்து ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும். வயலை தொடர்ந்து கண்காணித்து ஆரம்ப நிலையிலேயே இந்நோய் பாதித்த செடிகளை வேரோடு அகற்றி தீயிலிட்டு அழிப்பதன் மூலம் இந்நோய் மேலும் பரவுவதை தடுக்கலாம். விதைக்கும் முன் ஒரு கிலோ விதைக்கு இமிடாகுளோப்ரிட் 600 குளுபூச்சிக் கெல்லியை 5 மில்லி என்றளவில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைத்தால் ஆரம்ப நிலையிலேயே இதனைக் கட்டுப்படுத்தலாம்.