May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

உளுந்து விதைப்பண்ணை ஆய்வு

திருப்பூர், ஏப்.30

இந்தியப் பொருளாதாரத்தில் விவசாயம் இன்றியமையாத தொழில் என்பது மட்டுமல்லாமல் இலாபம் தரும் தொழிலாகவும் மாற்றமடைந்து வருவது வரவேற்புக்குரிய மாற்றமாகும். குறுகிய காலத்தில், குறைந்த நீர் மற்றும் இடுபொருட்களைக் கொண்டு குறைந்த செலவில் அனைத்து பருவத்திலும் அதிக மகசூல் தரவல்ல உளுந்து சாகுபடியானது விவசாயிகளின் முக்கியத் தேர்வாக உள்ளது. உளுந்து பயிருக்கான விதைத்தேவை எப்பொழுதும் உள்ளதால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் உளுந்து விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டு கலவன் நீக்கும் பணி நடைபெற்று வருகிறது. உடுமலை வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள உளுந்து விதைப்பண்ணையை திருப்பூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் பி.ஆ.மாரிமுத்து ஆய்வு செய்தார்.

அப்பொழுது அவர் கூறியதாவது : ஓவ்வொரு வருடமும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் பல்வேறு பயிர்களில் மகசூல் அதிகரிப்பு, நோய் எதிர்ப்புத்தன்மை, பருவம், சூழ்நிலைக்கேற்ற புதுப்புது இரகங்கள் வெளியிடப்பட்டு வருகிறன்றன. உளுந்து பயிரிலும் வம்பன் 5, வம்பன் 6 மற்றும் வம்பன் 8 இரகங்கள் வெளியிடப்பட்டு விவசாயிகளின் மகசூல் அதிகரிப்பிற்கு காரணமாக இருந்தன. இதனைத் தொடர்ந்து தற்பொழுது புதியதாக வெளியிடப்பட்ட வம்பன் 10 இரகமானது 70 நாட்களில் அதிக மகசூல் தருவதுடன் மஞ்சள் தேமல் நோய்க்கு அதிக நோய் எதிர்ப்புத்திறன் உடையதாகவும் உள்ளது. தற்பொழுது ஆதாரநிலை விதைப்பண்ணையாக அமைக்கப்பட்டுள்ள இந்த இரகமானது கலவன் நீக்கப்பட்டு தரமான விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு அடுத்த பருவத்தில் விவசாயிகளுக்கு வழங்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.

அறுவடை செய்யப்பட்ட பிறகு முளைப்புத்திறன், பிற இரகக் கலவன், ஈரப்பதம் போன்ற காரணிகளை பகுப்பாய்வின் மூலம் அறியப்பட்டு, விதைச்சான்று அலுவலர்களால் சான்று செய்யப்பட்டு தேர்ச்சி பெற்ற தரமான விதைகளாக விவசாயிகளுக்கு வழங்கப்படுவதால் பயிர் எண்ணிக்கை அதிகரித்து, நோய் எதிர்ப்புத்திறனுடன் அதிக மகசூலும் கிடைக்க ஏதுவாகிறது. பயிர் மகசூலை நிர்ணயிக்கும் காரணிகளில் விதைத் தேர்வு அடிப்படையானது என்பதால் விவசாயிகள் அனைவரும் சான்று செய்யப்பட்ட விதைகளையே தேர்ந்தெடுத்து அதிக மகசூல் பெற வேண்டும் என தெரிவித்தார்.

Spread the love