October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

உழவர் உற்பத்தியாளர் கம்பெனி இயக்குனர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

தேனி, அக்.12

தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் உழவர் உற்பத்தியாளர் கம்பெனி இயக்குனர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைப்பெற்றது. சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் பொ.மகேஸ்வரன் வரவேற்புரை வழங்கினார்.

சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் சேர்மன் முனைவர் பெ.பச்சைமால், தலைமை உரையாற்றி பயிற்சியை தொடங்கி வைத்தார். தேனி நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் சசிகுமார், சிறப்புரையாற்றி விவசாயிகள் பயன்பெறும் வகையில் உள்ள கடன்கள், மானியங்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வழங்கக்கூடிய சேவைகள் பற்றி கூறினார்.

பெரியகுளம் மேசாப் தொண்டு நிறுவனத்தின் தலைவர் முருகன், உழவர் உற்பத்தியாளர் நிறுவங்களை பதிவு செய்யும் விதிமுறைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து ராசிங்கபுரம் விடியல் தொண்டு நிறுவனத்தின் தலைவர் காமராஜ், உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முக்கியத்துவம் பற்றியும், விவசாயிகள் தங்களது வருமானம் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் வழிமுறைகளைப் பற்றி எடுத்துரைத்தார். மேலும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனர்களை குழுவாக ஒருங்கிணைத்து கலந்துரையாடலை நிகழ்த்தி அதன் மூலம் சந்தேகங்களை நிவர்த்தி செய்து வைத்தார்.

இந்த பயிற்சியில் திராட்சை, கரும்பு மற்றும் வெற்றிலை, மலர், தேன் மற்றும் வாழை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் இயக்குனர்கள் மொத்தம் 50க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெற்று பயன் பெற்றனர். இறுதியாக சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் சி.சபரிநாதன் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

Spread the love