August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

உழவர் நண்பர்களுக்கான தொழில் நுட்ப இணைய வழி பயிற்சி

சிவகங்கை, ஜூலை 6

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டாரம் வேளாண்மை-உழவர் நலத்துறை (அட்மா) விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் சமிதி, குடுமியான்மலை புதுக்கோட்டை பயிற்சி நிலையத்திலிருந்து காளையார்கோவில் வட்டார உழவர் நண்பர்களுக்கு தொழில்நுட்ப செய்திகள் மற்றும் பயிற்சிகள் CISCO WEBEX என்ற இணையவழி மூலமாக 5.7.2022 அன்று காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், எஸ்.என்.செந்தில்நாதன், வேளாண்மை உதவி இயக்குநர் முன்னிலையில் நடைபெற்றது.

இப்பயிற்சியில் முனைவர் சங்கரலிங்கம், சமிதி, குடுமியான்மலை பயிற்சி நிலைய இயக்குநர், பயிற்சியின் முக்கியத்துவங்கள் மற்றும் பயன்கள் குறித்து விரிவாக எடுத்துக்கூறி பயிற்சியினை துவக்கி வைத்தார். இப்பயிற்சியில் பத்மபிரியா, வேளாண்மைஅலுவலர் மண் மாதிரிகள் எடுப்பதற்க்கு முன்பு கவனிக்க வேண்டிய குறிப்புகள் சேகரிக்க வேண்டிய காலம் மற்றும் மண் பரிசோதனை அதன் முக்கியத்துவங்கள், மேலும் ஒவ்வொரு பயிர்களுக்கும் எவ்வளவு ஆழத்தில் எடுக்கும் முறைகள் தொடர்பான தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு விரிவான முறையில் எடுத்துக் கூறினார்.

இப்பயிற்சியில் சுபத்ரா, வேளாண்மை உதவி இயக்குநர், குடுமியான்மலை, இயற்கை உரங்களின் பயன்பாடுகள் தொழுஉரம், ஊற்றமேற்றிய தொழுஉரம் அதன் முக்கியத்துவம், இயற்கை உரங்களான பசுந்தாழ் உரம் மற்றும் பசுந்தழை உரங்கள் பயிரிடும் முறைகள் அதில் உள்ள முக்கிய சத்துக்கள், பசு மாட்டின் கழிவுகளிலிருந்து தயாரிக்கக்கூடிய அமிர்த கரைசல், ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், பஞ்சகாவ்யா போன்ற இயற்கை உரங்களை பற்றி தெளிவான முறையில் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். மேலும் இப்ராம்ஷா, வேளாண்மை உதவி இயக்குநர், குடுமியான்மலை, பாசன நீர் பரிசோதனை மற்றும் அதன் முக்கியத்துவங்கள், பரிசோதனைக்கு நீர் சேகரிக்கும் முறைகள், பாசன நீரில் உள்ள குறைபாடுகள் மற்றும் அதில் உள்ள சத்துக்கள், களர் நிலம் மற்றும் உவர் நிலங்கள் வேறுபாடுகள் அதனை நிவர்த்தி செய்யும் முறைகள் முதலான தொழில் நுட்ப கருத்துக்கள் கூறினார்.

பயிற்சியில் சதீஷ், வேளாண்மை அலுவலர், குடுமியான்மலை, விதை நேர்த்தி மற்றும் விதை கடினப்படுத்துதல் தொடர்பான தொழில் நுட்பங்களையும், விதை நேர்த்தி செய்வதனால் ஏற்படும் பயன்களான வீரியமான நாற்று, விதை தரம் பிரித்தெடுத்தல், உர பயன்பாடு திறன் அதிகரித்தல், பூச்சி, பூஞ்சாணங்களிடமிருந்து இள நாற்றுகளை பாதுகாத்தல், எதிர் வினைகளை நீங்கி வளருதல், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொடர்பான வழிமுறைகளை விரிவாக எடுத்துக் கூறினார். மேலும், வட்டார தொழில்நுட்ப மேலாளர் கோகிலா மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் காளீஸ்வரி பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர். மேலும் இணையவழி மூலமாக நடத்தப்பட்ட பயிற்சியில் காளையார்கோவில் வட்டார உழவர் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Spread the love