May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஊட்டமேற்றிய கரும்புத்தோகை கழிவு உரம் தயார் செய்வது எப்படி?

கரும்பு பயிரில் ஒரு பருவத்தில் ஒரு எக்டருக்கு 10 முதல் 12 டன் வரை உலர்ந்த கரும்புதோகை கிடைக்கிறது. கரும்பு பயிரில் 5 முதல் 7 மாதம் வரை உலர்ந்த பயனற்ற இலைகளை நீக்கும் பருவமாகும். கரும்பு தோகையில் 0.35 சதம் தழைசத்தும், 0.13 சதம் மணிசத்தும், 0.31 சதம் சாம்பல் சத்தும் மற்றும் கணிசமான அளவில் நுண்ணுட்டச்சத்துக்களும் உள்ளன. எனவே இவற்றை எரிக்காமல் பயனுள்ள வகையில் இயற்கை உரமாக மாற்றி பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்
• கரும்புத்தோகை மற்றும் சர்க்கரை ஆலைக்கழிவு.
• காளான் வித்து – 1கிலோ.
• யூரியா – 7.5 கிலோ.
• மாட்டுச்சாணம் – 75கிலோ.
• மண் மற்றும் தண்ணீர்.

தயாரிக்கும் முறை
• கரும்புத்தோகையை சிறு சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும்.
• நிழல் தரும் வசதியான இடத்தில் 15 மீ நீளம், 3 மீ அகலம், 1 மீ ஆழம் உள்ளவாறு குழியை அமைக்க வேண்டும்.
• இக்குழியில் 500 கிலோ கரும்புத்தோகையைப் பரப்ப வேண்டும். பின்பு இதன் மீது சர்க்கரை ஆலைக்கழிவினை 5 செ.மீ அளவிற்கு நிரப்ப வேண்டும்.
• இதன் மீது காளான் வித்து, யூரியா மற்றும் மாட்டுச்சாணம் ஆகியவற்றை நீரில் நன்கு கரைத்து இதன் மீது சீராக தெளிக்க வேண்டும்.
• இவ்வாறு மாற்றி மாற்றி கரும்புத்தோகை, ஆலைக்கழிவு, காளான் வித்து மற்றும் மாட்டுச்சாணம் ஆகியவைகளை பயன்படுத்தி 10 முதல் 15 அடுக்குகள் வரை குழியில் பரப்பலாம்.
• கடைசி அடுக்கின் மீது 15 செ.மீ மண் கொண்டு மொழுகி குவியல் முழுவதும் நனையும்படி நீர் தெளிக்க வேண்டும்.
• இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை தண்ணீர் தெளித்து வர வேண்டும்.
• மூன்று மாதங்கள் முடிந்த பிறகு கரம்புத்தோகை குவியலைப் பிரித்து நன்றாக கலந்து மீண்டும் குவியலாக மாற்றப்பட வேண்டும்.
• தொடர்ந்து சீராக தண்ணீர் தெளித்து வர வேண்டும்.
• நான்காவது மாதத்தில் தோகைகள் நன்கு மக்கி ஊட்ட மேற்றிய கரும்புத்தோகை கழிவு உரமாக மாறிவிடும்.
• மக்கிய உரம் எக்டருக்கு 5டன் என்ற அளவில் பரிந்துரைக்கப்படுகிறது. இவை மிக சிறந்த இயற்கை உரமாகும்.

தகவல் : இரா.ஜெயசங்கர்மூர்த்தி (முதுகலை வேளாண்மை மாணவர்), கோழிப்பட்டு, விழுப்புரம். 89404 75344, agrijay102@gmail.com, செ.லெட்சுமணன், கரும்பு அலுவலர், பண்ணாரி அம்மன் கரும்பு ஆலை, திருவண்ணாமலை மாவட்டம், 88255 12841, laksh.agri@gmail.com, இரா.வெங்கடேஷ் (இளங்கலை வேளாண்மை மாணவர்), பொற்படாக்குறிச்சி, கள்ளக்குறிச்சி. 8667339761, agrivenkatesh20@gmail.com

Spread the love