June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுப்பயிற்சி

திருப்பூர், ஏப்.12

திருப்பூர் மாவட்டத்தில் கிராமப்புற இளைஞர்களிடையே இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வேளாண் இணை இயக்குநர் அலுவலகக் கூட்டரங்கில் 29.03.2022 முதல் ஊரக இளைஞர்களுக்கான வேளாண் திறன் மேம்பாட்டு, இயக்ககத்தின் கீழ் பயிற்சியானது நடைபெற்று வருகிறது. ஒரு மாதம் வழங்கப்படும் இந்தப் பயிற்சியில் இயற்கை வேளாண்மையின் நோக்கம், உற்பத்தி முறைகள், மண்வள மேம்பாடு, பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டு காரணிகள், விதை உற்பத்தி, மகசூல் மேம்பாடு, விளை பொருள் விற்பனை, வர்த்தகம், ஏற்றுமதி குறித்து அனைத்து விவரங்களும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் தேர்ந்த அனுபவம் மிக்க விவசாயிகள் கொண்டு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா.வடிவேலு இப்பயிற்சிக்கு தலைமையேற்று இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்தும், இயற்கை விவசாயத்தில் இளைஞர்கள் தங்களின் தொழில் நுட்ப அறிவுகளை பிறரும் பயன்படும் வகையில் அனைவருக்கும் வழிகாட்டியாக செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இயற்கை வேளாண் விளை பொருட்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முன்னோடி விவசாயி எழிலன் விளைபொருட்களின் உற்பத்தி அதிகரிப்பு, ஒரே மாதிரி தரமான விளை பொருட்களை உற்பத்தி செய்வது, தரம் பிரித்தல் தொழில்நுட்பம், ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து புள்ளி விவரங்களுடன் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் ஏற்றுமதி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும், தரம் பிரித்து தரமான விளைபொருளாகக் கொடுக்கும் பட்சத்தில் வாய்ப்புகள் நமக்கு வீடு தேடி வரும் எனவும் தெரிவித்தார். பெரும்பாலான வேளாண் பயிர்களிலும் உற்பத்தியில் முதலிடம் மற்றும் முக்கியத்துவம் பெறும் நம்நாடு ஏற்றுமதியில் பின் தங்கி இருப்பது வேதனை அளிப்பதாகவும், தற்பொழுது பயிற்சி பெறும் இந்த இளைஞர்கள், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் ஏற்றுமதி செய்ய விரும்புவர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் உடுமலை வட்டாரம் அந்தியூர் கிராமத்ததை சார்ந்த இயற்கை வேளாண் முன்னோடி விவசாயி செல்வராஜ் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விரிவாக தனது அனுபவத்தை இளைஞர்களுடன் பகிர்ந்து கொண்டார். இயற்கையின் அருட் கொடையான மண் வளத்தை பாதுகாத்தலே இயற்கை விவசாயத்தின் அடிப்படை என அவர் தெரிவித்தார். மண்வள மேம்பாட்டிற்கு பஞசகாவியம், ஜீவாமிர்தம், அமிர்த கரைசல் உற்பத்தி முறைகள், உழவன் நண்பன் மண்புழுவின் மகத்துவம், மண்புழு உர உற்பத்தி முறைகள், சாறு உறிஞசும் பூச்சிக் கட்டப்பாட்டிற்கு கற்றாழை வளர்ப்பு மற்றும் இஞ்சி பூண்டு கரைல் தெளிப்பு, வேப்பங்கொடடை, வேப்பம் புண்ணாக்கு பயன்பாடு குறித்து தெளிவாக எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து பயிற்சியில் கலந்து கொண்ட இளைஞர்களின் சந்தேகங்களுக்கு தெளிவாகவும், விளக்கமாகவும் பதிலளித்தார்.

இறுதியில், திருப்பூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மாரிமுத்து அனைவருக்கும் நன்றி கூறினார். மேலும், வருங்கால விவசாயம் இளைஞர்களின் ஆர்வம் மற்றும் நம்பிக்கையில் தான் உள்ளது எனவும், இப்பயிற்சியின் நோக்கத்தினை இளைஞர்கள் நடைமுறைப்படுத்தி பிற விவசாயிகளுக்கு வழிகாட்டியாக, முன்னோடியாக செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இப்பயிற்சியின் பொழுது விதைச்சான்று அலுவலர்கள் (தொழில் நுட்பம்) வசந்தாமணி மற்றும் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Spread the love