May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஊரக இளைஞர்களுக்கு விதைப் பரிசோதனை தொழில்நுட்ப செயல்முறை விளக்கம்

திருவாரூர், மே 4

தரமான விதைகளை தரமான முறையில் தரம் குறையாமல் விவசாயிகளுக்கு கொண்டும் உயரிய நோக்கத்துடன் பெரிய மில் தெரு, விஜயபுரம், திருவாரூர் என்ற முகவரியில் திருவாரூர் விதைப்பரிசோதனை நிலையம் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. விதைப்பரிசோதனை நிலையத்தில் நடைபெறும் விதைப்பரிசோதனை பணிகள் சம்பந்தமாக தெரிந்து கொண்டு பயிற்சி பெறுவதற்கு ஊரக இளைஞர்களுக்கு (ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் – தரமான விதை உற்பத்தியாளர் – வேளாண் திறன் மேம்பாட்டு பயிற்சி) விதைப்பரிசோதனை தொழில்நுட்ப நடைமுறைகளை கண்டறிய 4.5.22 அன்று வருகைப்புரிந்திருந்தனர்.

அவர்களுக்கு விதைப்பரிசோதனை நிலையத்தில் ஆய்வு செய்யப்படும் சான்று விதை மாதிரிகள், ஆய்வாளர் விதை மாதிரிகள், மற்றும் பணிவிதை மாதிரிகள் குறித்து விளக்கப்பட்டு, மேலும் விதைப்பரிசோதனை நிலையத்தில் ஸபெக்ஸ் (SPECS) இணைய தளம் மூலம் விதை மாதிரிகள் பெறுவது, விதை மாதிரிகளில் மேற்கொள்ளப்படும் ஈரப்பத பரிசோதனை, புறத்தூய்மை ஆய்வு, பிற ரககலவன் பரிசோதனை மற்றும் முளைப்புத்திறன் பரிசோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின் போது டிஜிட்டல் முறை ஈரப்பதம் கணிக்கிடும் கருவி, விதை பதர் நீக்கும் கருவி, விதை புறத்தூய்மை கணக்கிட உதவும் பியூரிட்டி போர்டு மற்றும் நெல் உமி நீக்கும் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. மேலும் முளைப்புத்திறன் அறையில் முளைப்புத்திறன் பரிசோதனை மேற்கொள்ளும் முறைகள், முளைப்பு ஊடகம், முளைப்புத்திறன் அறையில் கடைபிடிக்கப்படும் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் வெளிச்சத்தின் அளவு குறித்தும் விரிவாக கூறப்பட்டது. முளைப்புத் திறன் அறையில் உள்ள நெல் நாற்றுக்கள் பயறுவகை பயிர்கள் மற்றும் பருத்தி பயிர் விதை நாற்றுக்கள், முளைப்புத்திறன் கணக்கீடு குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டது. மேலும் விதை மரபணு வங்கியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 100 வகையான பயிர் ரகங்களின் கருவிதைகள் மற்றும் பாரம்பரிய ரகங்களின் நன்மைகள் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. இப்பயிற்சியினை விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் கா.புவனேஸ்வரி மற்றும் வேளாண்மை அலுவலர் சே.சிவசக்தி வழங்கினர்.

Spread the love