ஈரோடு, ஏப்.23
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கால், ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு நேற்று ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்காக
கொண்டு வந்தனர். தமிழகத்தில் இரவு, 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு நிலவுவதால், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநில
வியாபாரிகள் அதிகளவில் வரவில்லை. நேற்றைய சந்தை காலை, 5.00 மணிக்கு பின்னரே கூடியது. தென் மாவட்டம், மலைப்பகுதி மாடுகள் வரத்தாகவில்லை.
இது குறித்து, மாட்டு சந்தை உதவி மேலாளர் ராஜேந்திரன் கூறுகையில், கரோனா தொற்று அச்சம், இ-பாஸ், ஊரடங்கு போன்ற காரணத்தால் வெளி மாநில வியாபாரிகள் குறைவாகவே
வந்தனர். பசு, 350, எருமை, 100, கன்று, 50 என, 500 மாடுகளே வரத்தானது. வழக்கமாக, 800 முதல் 900 மாடுகள் வரத்தாகும். அதிகாலை, 4.00 மணி முதல் 10.00 மணிக்குள் மாடுகள் விற்பனையாகும்.
நேற்று மதியம், 2.00 மணி வரை சந்தை நடந்தது. வெளிமாநில வியாபாரிகள் குறைவாக வந்ததால், 40 சதவீத மாடுகளே விற்பனையானது என அவர் கூறினார்.