சென்னை, ஏப்.28
ஊரடங்கிலும், விவசாய தொழிலாளர்கள் மற்றும் கருவிகள் தங்கு தடையின்றி, மாநிலம் முழுவதும் செல்ல உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, வேளாண் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து வேளாண் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : விவசாய இடுபொருட்கள் வினியோகம் மற்றும் விளைபொருட்கள் விற்பனை சார்ந்த
பணிகள், ஊரடங்கு காலத்தில், எவ்வித தடையும் இன்றி தொடர, தமிழக அரசால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனைத்து மாவட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் போதுமான அளவு விதை, உரம் இருப்பு வைத்து, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு
வருகிறது. அறுவடை பணிகள் தொய்வின்றி நடக்க, உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், பண்ணை இயந்திரங்களை வழங்கி வருகின்றன. கரோனா குறித்த விழிப்புணர்வுடன் அறுவடை பணிகள்
மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அறுவடை செய்துள்ள தானியங்களை, எவ்வித இடையூறும் இல்லாமல் விற்பனை செய்ய, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. தேவைப்படும் இடங்களில், கொள்முதல் நிலையங்கள்
வாயிலாக, நெல் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாய தொழிலாளர்கள் மற்றும் கருவிகள் தங்கு தடையின்றி, அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநிலம்
முழுவதும் செல்ல, வேளாண்மை துறை அதிகாரிகளால் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கரோனா வழிமுறைகளை பின்பற்ற, அனைத்து விவசாயிகள் மற்றும் பணியாளர்களுக்கும், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என அதில் கூறப்பட்டு உள்ளது.