கொழும்பு, மே 8
கோவிட் தொற்று பரவலால் 14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.
கொல்கத்தா, ஐதரபாத், சென்னை, தில்லி ஆகிய அணியை சேர்ந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கோவிட் தொற்று காரணத்தால் பாதிக்கப்பட்டனர். 4 அணிக்குள் தொற்று ஊடுருவியதால் வேறு வழியின்றி ஐ.பி.எல். போட்டியை ஒத்திவைக்க வேண்டியதாகி விட்டது.
பாதியிலேயே தள்ளிவைக்கப்பட்டு உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எஞ்சிய ஆட்டங்களை நடத்த இங்கிலாந்தில் உள்ள கவுண்டி அணிகள் முன்வந்துள்ளன.
எம்.சி.சி. சர்ரே, வார்விக்ஷைர், லங்காஷைர் ஆகிய கவுண்டி அணி நிர்வாகங்கள் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளன. அதில் ஐ.பி.எல். போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அழைப்பு விடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளன. செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில் 2 வாரத்திற்குள் போட்டியை நடத்தி முடிக்கலாம் என்றும், ரசிகர்கள் கூட வர வாய்ப்புள்ளது என்றும் கவுண்டி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந் நிலையில், இந்தியாவின் அண்டை நாடான இலங்கையும் ஐபிஎல்- தொடரின் எஞ்சிய ஆட்டங்களை நடத்த ஆர்வம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் ஐபிஎல் போட்டிகளுக்காக இடம் அளிக்க தயார் என்று இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.
எனினும், ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகளை நடத்துவதற்கே இந்திய கிரிக்கெட் வாரியம் அதிக ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.