August 4, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை

புது தில்லி, மே 7

சுமார் 8 ஆண்டுகளுக்கு முன் தடைபட்ட வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு இந்தியாவும் ஐரோப்பிய யூனியன் அமைப்பும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: இந்தியாவுக்கும் 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியன் அமைப்புக்கும் இடையேயான மாநாடு சனிக்கிழமை (மே 8ம்) காணொலி வாயிலாக நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். 27 ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்குப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தைகள் 8 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், அந்தப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் திட்டமிட்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனிக்கிழமை நடைபெறும் மாநாட்டின்போது வெளியிடப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், கடந்தகால பேச்சுவார்த்தையின்போது வரி விதிப்பு, தரவுப் பாதுகாப்பு, சந்தை வாய்ப்புகள் உள்ளிட்டவற்றில் சுமுகத் தீர்வு எட்டப்படாமல் இருந்தது. ரயில்வே, கடல்சார் விவகாரங்கள், விமானப் போக்குவரத்து உள்ளிட்டவற்றில் இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான அறிவிப்பும் மாநாட்டின்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான மாநாடு போர்ச்சுகலில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கோவிட் தொற்று பரவல் காரணமாக அந்த மாநாடு காணொலி வழியாக நடைபெறுகிறது.

Spread the love