நாமக்கல், மார்ச் 29
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டாரத்தில் உள்ள அக்கியம்பட்டி கிராமத்தில் எருக்கு மற்றும் மேம்படுத்தப்பட்ட எருக்குக் கரைசல் தயாரிக்கும் முறை மற்றும் அதன் பயன்படுத்தும் முறையைப் பற்றி பிஜிபி வேளாண்மை இறுதி ஆண்டு மாணவிகள் விவசாயிகளுக்கு செய்து காட்டினார்கள். இதனைத் தயாரிக்க 10 லிட்டர் தண்ணீர், 1 கிலோ எருக்கு மற்றும் 1 கிலோ நாட்டுச் சர்க்கரை ஆகியவை தேவைப்படுகிறது. இக்கரைசல் முழுமையாக தயாரிப்பதற்கு 20 நாட்கள் தேவைப்படுகின்றன. இக்கரைசலை 15 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.
இக்கரைசலை தென்னை, கத்தரி, தக்காளி மற்றும் கொய்யா போன்ற பயிர்களுக்கு பயன்படுத்தலாம். இக்கரைசலில் அதிக அளவு போரான் சத்து உள்ளதால், தென்னை மரத்தில் பிஞ்சு மற்றும் குரும்பை உதிர்வதைத் தடுக்கின்றது. கத்தரி, தக்காளி மற்றும் கொய்யா போன்ற பயிர்களில் உள்ள பழங்களில் வெடிப்பு மற்றும் சுருக்கம் உருவாகின்றதைத் தடுக்கிறது. இக்கரைசலை தென்னை போன்ற மரப்பயிர்களுக்கு தரைவழி மூலமாகவும் மற்றும் கத்தரி, தக்காளி, கொய்யா போன்ற பயிர்களுக்கு இலைவழி மூலமாகவும் பயன்படுத்தலாம்.
Spread the love