October 23, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

எர்ணாகுளத்திலிருந்து உரங்கள் ஈரோடு வருகை

ஈரோடு, அக்.9

ஈரோடு மாவட்டத்தில் தற்போது நடப்புப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளம் 11970 ஹெக்டர், ராகி 4190 ஹெக்டர், பயறுவகை 4650 ஹெக்டர், எண்ணைவித்து 18380 ஹெக்டர், கரும்பு 10380 ஹெக்டர் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் 44000 ஹெக்டர், பயிர்களுக்கு உரத்தின் தேவை மிகவும் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து 8.10.2021ல் எப்.ஏ.சி.டி, நிறுவனங்களிலிருந்து 824 மெட்ரிக் டன் அம்மோனியம் சல்பேட், மற்றும் 500 மெ.டன் 20:20:0:13 காம்ப்ளக்ஸ் உரங்கள் இரயில் மூலம் வரவழைக்கப்பட்டு விநியோகம் செய்வதை வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு செய்தார்.

மேலும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மண்பரிசோனை செய்து பெறப்பட்ட மண் வள அட்டையின் அடிப்படையில் அல்லது வேளாண்மை துறை பரிந்துரையின்படி உரம் இட வேண்டும். தேவைக்கு அதிகமாக யூரியா உரம் பயன்படுத்துவதை தவிர்க்கவும். தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதால் பயிர்களின் பூச்சி நோய் தாக்குதல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
உரங்களின் விலைப்பட்டியல் விவசாயிகளுக்கு தெரியும்படி வைப்பது, உரிய முதன்மைச்சான்று படிவங்கள் நிறுவனங்களிடமிருந்து பெற்று உரங்களை கொள்முதல் செய்வது, விற்பனை இரசீது விவசாயிகள் கையொப்பம் பெற்று உரங்கள் வழங்குவது, அனைத்து விற்பனைகளையும் விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்து, உரங்களை அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இருப்பு வைப்பது தொடர்பாக அனைத்து உர விற்பனையாளர்களுக்கும் வேளாண்மை இணை இயக்குநர் அறிவுறுத்தினார்.

இதனை மீறும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் எச்சரித்துள்ளார். இதனை வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர்கள் தீவிரமாக கண்காணிக்க வேளாண்மை இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது ஈரோடு மாவட்டத்தில் யூரியா 1950 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 1497 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 1517 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 6734 மெ.டன்னும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உரங்களை வாங்கும் போது மூட்டையில் அச்சடிக்கப்பட்ட விலையினை பார்த்து உரிய இரசீது பெற்று உரங்களை வாங்கி பயன்பெறுமாறு வேளாண்மை இணை இயக்குநர் கேட்டுக்கொண்டார்.

Spread the love