ஷாங்காய் மோட்டார் வாகனக் கண்காட்சியில் எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் மாடலை வெளியிட்டுள்ளது ஹோண்டா நிறுவனம்.
ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா கார் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்தியுள்ளது. ஹோண்டா e:prototype என்ற பெயரில் இந்த மாடல் குறிப்பிடப்படுகிறது. அடுத்த ஆண்டில் இதன் தயாரிப்பு நிலை மாடலானது சந்தைக்குக் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 5 ஆண்டுகளில் 10 புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை சர்வதேச அளவில் கொண்டு வர ஹோண்டா திட்டமிட்டுள்ளது. அதில், இந்தப் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி முதல் மாடலாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி போன்ற மாடலாக இது இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் முகப்பில் உள்ள எல்இடி விளக்குடன் கூடிய லோகோவில் சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. முரட்டுத் தோற்றத்தை அளிக்கும் பாடி கிளேடிங், பின்புறத்தில் லைட் பார் அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.
இந்தக் காரில் மூன்றாம் தலைமுறை ஹோண்டா கனெக்ட் தொழில்நுட்ப வசதி மற்றும் ADAS தொழில்நுட்ப வசதி, இணைய வசதி, நேரலை அப்டேட் வசதி மற்றும் வாய்ஸ் ரெககனிஷன் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பெற்றுள்ளது.
ஆனால், இந்த காரின் பேட்டரி, ரேஞ்ச், பவர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.