சென்னை, ஏப்.22
நாட்டில் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-யில் மார்ச் 2021ல் பாலிசி விற்பனை 299 சதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது:
நாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் குறிப்பாக மார்ச் மாதத்தில் அதிகளவிலான பாலிசிகள் விற்பனையில் செய்யப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
எல்ஐசி மார்ச் 2020 முதல் மார்ச் 2021 வரையிலான காலகட்டத்தில் சுமார் 2.1 கோடி பாலிசிகளை விற்பனை செய்துள்ளது. இதில் 47 லட்சம் பாலிசிகள் மார்ச் 2021 ஒரு மாதத்தில் மட்டும் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
2020 மார்ச் மாதத்தில் கோவிட் தொற்றுக் காரணமாக எல்ஐசி மிகவும் மோசமான வர்த்தகத்தைப் பெற்ற நிலையில் 2021 மார்ச் மாதத்தில் கடந்த ஆண்டை விடவும் 299 சத அதிகப் பாலிசிகளை விற்பனை செய்துள்ளது.
மேலும், ப்ரீமியம் வசூல் அளவீட்டிலும் 2021ம் நிதியாண்டில் சாதனை படைத்துள்ளது இந்நிறுவனம். மார்ச் 31 உடன் முடிந்த நிதியாண்டில் மட்டும் சுமார் ரூ.56,406 கோடி அளவிலான ப்ரீமியம் தொகையை வசூல் செய்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. இது 2020ம் நிதியாண்டை விடவும் 10.1 சதம் அதிகமாகும். மேலும் மொத்த இன்சூரன்ஸ் சந்தையில் வர்த்தகத்தில் எல்ஜிசி மார்ச் மாதம் 81 சத வர்த்தகத்தையும், 2021 நிதியாண்டில் 75 சத வர்த்தகத்தையும் கைப்பற்றி இந்திய இன்சூரன்ஸ் துறையில் ஆதிக்கம் செலுத்துகிறது.