June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

எல்&டி இன்ஃபோடெக் நிகர லாபம் மார்ச் காலாண்டில் ரூ.546 கோடி உயர்வு

புது தில்லி, மே 6

மார்ச் காலாண்டில் ஐடி துறையைச் சேர்ந்த எல்&டி இன்ஃபோடெக் நிறுவனத்தின் லாபம் ரூ.545.7 கோடியாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து எல்&டி இன்போடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2020-21வது நிதியாண்டின் ஜனவரி- மார்ச் மாதம் வரையிலான நான்காவது காலாண்டில் எல்&டி இன்போடெக் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய வருமானம் ரூ.3,269.4 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2019-20ம் நிதியாண்டில் நிறுவனம் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ3,011.9 கோடியுடன் ஒப்பிடுகையில் 8.5 சதம் அதிகமாகும் என தெரிவித்துள்ளது.

மேலும், நிகர லாபம் ரூ.427.5 கோடியிலிருந்து 27.6 சதம் வளர்ச்சி கண்டு ரூ.545.7 கோடியைத் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2021 முழு நிதியாண்டில் இந் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் 27.5 சதம் உயர்ந்து ரூ.1,938.2 கோடியானது. அதேபோல், செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய வருவாயும் 13.7 சதம் அதிகரித்து ரூ.12,369.8 கோடியை எட்டியுள்ளது.

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் ஈட்டிய ஒட்டுமொத்த வருவாயில் டிஜிட்டல் பிரிவிலான வருவாயின் பங்களிப்பு 45.6 சதமாக இருந்தது.

2021 மார்ச் இறுதி நிலவரப்படி இந் நிறுவனத்தின் மொத்த பணியாளர் எண்ணிக்கை 35,991-ஆக இருந்தது. கடந்த 2020-21ம் நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.25 இறுதி ஈவுத்தொகை வழங்க நிறுவனத்தின் இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love