August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

எளிதான அத்திப்பழம் சாகுபடி முறைகள்

புது அனுபவமாக விருதுநகர் நரிக்குடி வட்டம், விடத்தகுளம் கிராமத்தில் அமர்நாத் என்பவர், அத்திப்பழம் சாகுபடி செய்து நல்ல அனுபவம் பெற்றுள்ளார். அவர் கூறும் தகவல் யாதெனில் அத்தி சாகுபடி வெகு எளிது. இதர பயிர்கள் போலவே, இதற்கு பராமரிப்பு தேவை. மழைக் காலங்களுக்கு பிறகு நிலத்தினை ஐந்து கலப்பை கொண்டு ஒருமுறை 9 கலப்பை கொண்டு இரண்டுமுறை என சீரான இடைவெளியில் உழுது நிலத்தினை நன்றாக ஆறவிட வேண்டும். அதன்பின்னர் ஜேசிபி மூலமாக 2க்கு 2 நீள அகலமாக மூன்று அடி ஆழத்தில் குழி அமைத்து கொள்ளவேண்டும். சாதாரண டிராக்டரில் 11க்கு7 அடி பவர் டிராக்டர் எனில் 9க்கு7 அடி இடைவெளியும் விடவேண்டும். குழியினுள் படுக்கைபோல ஒரு அடிக்கு மண்புழு தொழு உரம் இட்டு அதற்கு மேலே நிலத்தின் மேல் மண் ஒரு அடி அளவில் நிரப்பி கொள்ளவேண்டும். அதனுடன் சூமோமோனாஸ் மற்றும் டிரைகோடெர்மா வெரிடி இட்டு ஒரு மாதம் மக்க விட்ட பின்னர் நாற்றுக்களை நடவேண்டும். நட்டவுடன் உயிர் நீரும் பின்னர் சொட்டு நீர்பாசன அமைப்பு ஏற்படுத்தியிருந்தால் நிலத்தின் ஈரத்தன்மை வெயில் நிலையை கணக்கில் கொண்டு துவக்கத்தில் இரண்டு நாட்களுக்கு ஓருமுறை பின்னர் வாரம் ஒருமுறை என குறைந்த அளவில் மட்டுமே பாய்ச்ச வேண்டும். ஆரம்பத்தில் பதினைந்து நாட்கள் இடைவெளியில் இரண்டு முதல் மூன்று தடவை களை எடுக்கவேண்டும். அதன் பிறகு களைகள் தென்பட்டால் மட்டும் எடுத்தால் போதுமானது.

நட்ட எட்டாவது மாதத்திலிருந்து பலனளிக்க துவங்கும். நம்முடைய பராமரிப்பினை பொறுத்து 20 முதல் 25 ஆண்டுகள் வரை தொடர்ந்து பலனளிக்கும். முதல் மற்றும் இரண்டாவது ஆண்டில் ஒரு செடியிலிருந்து 5 முதல் 7 கிலோவில் துவங்கி படிப்படியாக அதிகரித்து நான்காவது ஆண்டிலிருந்து சராசரியாக 20 கிலோ வரை கிடைக்கும். அறுவடை முடிந்தவுடன் மேலும் தேவையிருந்தால் கவாத்து செய்துவிட்டு உரங்கள் அளித்தால் மீண்டும் 50 நாட்களில் காய்கள் வரத்து துவங்கிவிடும். அறுவடை முடிந்த பிறகு செடிகளை தூரோடு வெட்டாமல் கொய்யாச் செடிகளைபோல் நுனியினை மட்டும் கிள்ளிவிட வேண்டும். ஒரு ஏக்கரில் 11க்கு7 அடி இடைவெளியில் 550 செடிகள் நட இயலும். ஒவ்வொரு செடியிலிருந்தும் நான்கு வருடங்களுக்கு பிறகு 25 கிலோ 9க்கு7 அடி இடைவெயியில் 680 செடிகள் நடும்போது 20 கிலோ என சராசரியாக கிடைக்க வாய்ப்புள்ளது. நம்முடைய செலவுக்கான முதலீடுகள் முதலிரண்டு ஆண்டுகளிலேயே கிடைத்துவிடும். சராசரியான விலையான கிலோ ரூ.80 என கணக்கிட்டாலே ஏக்கருக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு குறையாமல் வருமானமாக கிடைக்கும்.

மண்ணின் தன்மை இயற்கை சூழல் மற்றும் பராமரிக்கும் முறையினை பொறுத்து சிறிதளவு கூடுதல் குறைவாக கிடைக்கும். களிமண் தரையாக இருந்தால் வேர்பூச்சி தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு வேப்பம்பிண்ணாக்கு கரைசல் மட்டும் தெளித்தாலே போதுமானது. முக்கியமாக தண்ணீர் தேங்காமல் இருக்குமாறு வடிகால் வசதி ஏற்படுத்தி கொள்ள வேண்டும். களை எடுப்பதற்கு முன்பாக வெயில் காலத்தில் மண்புழு மூடாக்கு ஏற்படுத்து கொள்ளவேண்டும். அதன்பிறகு வருடந்தோறும் களை மற்றும் பராமரிப்புக்கென சராசரியாக ரூ.25,000 வரை செலவாகும். ப்ரௌன் டாக்கி என்ற ரகம், நீர்சத்து நிறைந்த பழங்களாக நேரடியாகவும், உலர் பழங்களாக யானா ரகமும் பயன்படுகிறது. அத்துடன் அத்தியின் இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை, பூ, வேர் போன்ற அனைத்து பாகங்களும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் மருத்துவக் குணங்கள் கொண்டவை.

மேலும் விபரம் பெற 98420 01725 உள்ளது.

டாக்டர்.பா.இளங்கோவன்.
பேராசிரியர் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர்

பாசன மேலாண்மை பயிற்சி நிலையம், துவாக்குடி, திருச்சி-15

Spread the love