மண்வளம் பெருகிட மண்புழுக்கள் பெரிதும் உதவுகின்றன. இவை கிடைத்த பயிர் கழிவுகளை உண்டு, நன்மை செய்யும் உரமாக்குவது நாம் அறிந்ததே. ஆனால் மண்புழுக் குளியல் நீர் பற்றி பலரும் அறிய வாய்ப்பில்லை. எலும்பே இல்லாத மெல்லுடலியான மண்புழுவிற்கு உடலை எப்போதும் ஈரமாகவே வைத்திருக்க வேண்டி, அவை வியர்வை போன்ற திரவத்தை மெதுவாக வெளிவிடுகின்றன. இந்த திரவத்தை சேகரித்து பயன்படுத்தும் உத்தி தான் மண்புழுக் குளியல் நீர் தயாரித்தலாகும். அதற்கு ஆங்கிலத்தில் வெர்மிவாஷ் என்ற பெயர் உள்ளது. இந்த நீருக்கு பயிர் வளர ஊக்கியாக செயல்படும் அற்புத சக்தியுண்டு.
மூன்று அல்லது நான்கு மண்புழுவை ஒரு தொட்டியில் அல்லது பானையில் வளர்த்து அதனடியில் சிறுதுளைகள் இட வேண்டும். இதன் மூலம் நீர் வடியும் வண்ணம் செய்யமுடியும். மண்புழு உள்ள பானைக்கு மேல்புறம் நீர் நிரம்பிய கலயம் அமைத்து அதில் ஒரு லிட்டர் நீரை ஊற்ற வேண்டும். அதற்கு முக்காலி போன்ற 3 கம்புகளை கட்டி தொங்க வைத்து சிறுதுளை ஏற்படுத்தி சொட்டுசொட்டாக வரவிட வேண்டும்.
ஒரு இரவு முழுவதும் இவ்வாறு சொட்டுச்சொட்டாக விழும் நீரானது மண்புழுவின் உடலையும் நனைக்கும் பின்னர் மண்புழு ஏற்படுத்திய சுரங்கங்களையும் கழுவிவிட்டு பானையின் அடிப்புறமாக துளைகள் வழியே வெளியேறும். இப்படி வெளியேறும் நீரே மண்புழுக் குளியல் நீரெனப்படும். இது டீத் தண்ணீர் மாதிரியுள்ள நீராகும். இதனை பானைக்கு அடியில் வேறு பாத்திரத்தை வைத்து சேகரித்து பயன்படுத்தலாம்.
அதாவது ஒரு லிட்டர் குளியல் நீரை 9 லிட்டர் நல்ல தண்ணீரில் கலந்து செடிகளுக்கு அடியில் ஊற்றியும், இலைவழியாக தெளித்தோ அல்லது சொட்டுநீர் பாசன முறையில் நீரில் கரைத்தும் அனுப்பி நல்ல லாபம் பெறலாம். தயாரிக்க முடியாதவர்கள் தனியார்வசம் வாங்கியும் பயன்படுத்துவது நல்லது.
காய்கறிகள், பழங்கள், தென்னை, மலர்கள், மலைத்தோட்டப் பயிர்களென எல்லா பயிர்களும் நல்ல மகசூல்தர மண்புழுக் குளியல் நீரை இலை வழியாக பிரதிமாதம் தெளிப்பது நல்லது.