June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

எள் பயிர் மேலாண்மைத் தொழில்நுட்பங்கள்

சிவகங்கை, ஏப்.6

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டாரம், வேளாண்மை உதவி இயக்குநர் ரா.பத்மாவதி நெல்லிற்கு பிறகு இரண்டாவது பயிராக எண்ணெய்வித்து பயிர்களான எள், நிலக்கடலை பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். தற்போது பெய்து வரும் கோடை மழையை பயன்படுத்தி எள் பயிர் மானாவாரி, குளிர்காலம் மற்றும் இறவை பட்டத்திலும் பயிரிடப்படுகிறது. இப்பயிருக்கு அதிக நீரும் தேவையில்லை. அது போலவே இப்பயிர் அதிக வெப்பத்தை தாங்கக்கூடிய சக்தியும் உண்டு. எனவே, சரியான பயிர்ப் பராமரிப்பு தொழில் நுட்பங்களை தவறாமல் கையாண்டால் எள் பயிர் சாகுபடியில் நல்ல விளைச்சலைப் பெறலாம் எனவும் மானாமதுரை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்தார்.

பட்டமும் இரகங்களும்

இறவை
மாசிப்பட்டம் விஆர்ஐ (எஸ்விபிஆர்)2, டிஎம்வி 7, விஆர்ஐ 3
சித்திரைப்பட்டம் விஆர்ஐ (எஸ்விபிஆர்)2, டிஎம்வி 7
மார்கழிப்பட்டம் விஆர்ஐ (எஸ்விபிஆர்)2, டிஎம்வி 7, விஆர்ஐ 3
ஆனிப்பட்டம் டிஎம்வி 7

மானாவாரி
ஆனிப்பட்டம் டிஎம்வி 7
கார்த்திகைப்பட்டம் விஆர்ஐ (எஸ்விபிஆர்)2, டிஎம்வி 7
ஆடிப்பட்டம் டிஎம்வி 7
புரட்டாசிப்பட்டம் விஆர்ஐ (எஸ்விபிஆர்)2, டிஎம்வி 7
தைப்பட்டம் டிஎம்வி 7

விதையளவு மற்றும் பயிர் எண்ணிக்கை

ஏக்கருக்கு 2 கிலோ எள் விதையை மணலுடன் கலந்து சீராகத்தூவி விதைக்கலாம்.ஏக்கருக்கு 1.5 கிலோ விதையை வரிசை பயிராக விதைக்கலாம்.

இடைவெளி 30 x 30 செ.மீ.
எண்ணிக்கை ஒரு சதுர மீட்டருக்கு 11 செடிகள்

விதை நேர்த்தி மற்றும் நுண்ணூட்டம் இடுதல் பூஞ்சாண விதை நேர்த்தி

கார்பன்டாசிம் 1 கிலோ விதைக்கு 2 கிராம் வீதமும், டிரைக்கோடெர்மா 1 கிலோ விதைக்கு 4 கிராம் வீதமும், தலா ஒரு பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா 2 கிலோ விதைக்கு என்றளவில் கலந்து விதைக்கலாம்.

நுண்ணூட்டச் சத்துகள் இடுதல்
மாங்கனீஸ் சல்பேட் – 2 கிலோ/ஏக்கருக்கு
சிங்க் சல்பேட்- 10 கிலோ/ஏக்கருக்கு

உர நிர்வாகம்
மண்ணில் நுண்ணுயிர்களின் பெருக்கத்தை அதிகரிக்கவும், கடைசி உழவின் போது மக்கிய தொழு உரத்தை ஏக்கருக்கு 5 டன் என்ற அளவில் இடவும்.

உரம் அளவு கிலோ/ஏக்கருக்கு
மானாவாரி இறவை
யூரியா 20 கிலோ 30 கிலோ
சூப்பர் பாஸ்பேட் 30 கிலோ 60 கிலோ
பொட்டாஷ் 10 கிலோ 15 கிலோ

களைக்கொல்லியும், களை நிர்வாகமும்
நாய் கடுகு, சாரனை, பண்ணை பூண்டு போன்றவைகள் எள் சாகுபடி செய்யும் நிலத்தில் பெரிதளவில் முளைத்து காணப்படும். இவ்வகை களைகளை எள் விதைத்த 40 நாட்கள் வரை கட்டுப்படுத்தினாலே பயிரின் விளைச்சல் அதிகரிக்கும். எள் விதைத்த 25வது நாள் மண்ணின் ஈரம் இருக்கும் தருணத்தில் பென்டிமெத்தலின் 500 மி.லி. ஏக்கருக்கு என்ற விகிதத்தில் மண்ணில் கலந்து இட்டாலோ (அ) கைத்தெளிப்பான் கொண்டு தெளித்தாலோ களைகளைப் பெரிதளவுக் கட்டுப்படுத்தலாம்.

பயிர் களைத்தல்
பயிர் களைத்தல் என்பது எள் சாகுபடியில் ஒரு முக்கியமான பராமரிப்பு தொழில் நுணுக்கமாகும். எள் விதைத்த 15 நாட்கள் கழித்து செடிக்கு செடி 15 செ.மீ. இடைவெளி இருக்கும் படியும், பின் 10 நாட்கள் கழித்து வரிசைக்கு வரிசை 30 செ.மீ. இடைவெளி இருக்கும்படி பயிர்களை களைத்துவிட வேண்டும்.

நீர் பாசனம்
எள்ளிற்கு குறைந்த நீர்பாசனம் போதுமானது. எள் பயிருக்கு இரண்டு தண்ணீரே போதுமானது. எள் செடி முளைத்து ஐந்து இலை விடும் பொழுது ஒரு நீர் பாய்ச்சுவதும், பிறகு பூவும், காயும் தோன்றும் பொழுது ஒரு நீர் பாய்ச்சவும். எனவே, எள்ளிற்கு மண்ணின் தன்மையை அறிந்து கொண்டு குறைந்த நீர்பாசனம் செய்வதே சிறந்தது.

அறுவடை

எள் பயிரை தக்க காலத்தில் அறுவடை செய்ய வேண்டும். பயிரின் வயதை கணக்கில் எடுத்துக் கொள்ளவும். தண்டின் அடிப்பாகத்தில் இலைகள் உதிர்ந்து காணப்படும். தண்டின் மேல் பாகத்தில் இலைகள் மஞ்சள் நிறமாக காணப்படும். தண்டில் மத்திய பாகம் வரை காய்கள் மஞ்சள் நிறமாக காணப்படும். தண்டில் கீழ் பாகத்திலிருந்து 10வது காயை உடைத்துப் பார்த்தால் நிறம் மாற்றம் காணப்படும் (கருப்பு மற்றும் பழுப்பு நிறம்). வெள்ளை நிற எள்ளிற்கு இது பொருந்தாது. செடிகளை அடியோடு (வேரை மட்டும் விட்டு) அறுத்து பிறகு செடிகளை வட்டமாக ஒன்றின் மீது ஒன்றாக தண்டு வெளியில் தெரியும் படியும் அடுக்க வேண்டும். பிறகு வைக்கோல் கொண்டு மூடிவிட வேண்டும். அதன் பின் ஐந்தாம் நாள் செடிகளை வெய்யிலில் காய வைத்து, உலுக்கி எள்ளினை பிரித்தெடுக்க வேண்டும்.

Spread the love