விழுப்புரம், ஏப்.24
விழுப்புரம் அருகே விதைப்பண்ணைகளை கோவை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் சுப்பையா நேரில் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பாண்டிற்கு (2021–22) நெல், உளுந்து, மணிலா, எள் போன்ற பல்வேறு பயிர்களுக்கு விதைப்பண்ணை சாகுபடி செய்யும் பரப்பு 3,600 எக்டர் நிர்ணயிக்கப்பட்டது.
இதில், ஏப்ரல் மாதத்தில் 130 எக்டர் சாகுபடி செய்யப்பட்டது. மேலும், விதைகளை சான்று செய்யும் இலக்கு 6,665 டன் நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 220 டன் சான்று செய்யப்பட்டு பணிகள்
நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோலியனூர் அடுத்த காவணிப்பாக்கம் கிராமத்தில் 2.50 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள எள் பயிர் விதைப்பண்ணையை, கோவை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று
இயக்குநர் சுப்பையா ஆய்வு செய்தார். அப்போது களப்பணியாளர்களுக்கு தொழில்நுட்ப அறிவுரைகளை வழங்கினார். மேலும், விழுப்புரம் விதைச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில்
விதைச்சான்றளிப்புத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்ட பணிகள் குறித்து, விதைச்சான்று அலுவலர்கள், விதை ஆய்வாளர்கள், விதைப்பரிசோதனை அலுவலர்களிடம் ஆய்வு
மேற்கொண்டார். அப்போது, விதை ஆய்வு துணை இயக்குநர் (பொறுப்பு) சோமு, விதைச்சான்று உதவி இயக்குநர் கதிரேசன் உடனிருந்தனர்.