October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

எஸ்ஐபி திட்டங்களில் முதலீட்டு வரத்து ரூ.10,000 கோடி மைல்கல்லை தாண்டியது

புது தில்லி, அக்.11

எஸ்ஐபி திட்டங்களில் முதலீட்டு வரத்து ரூ.10,000 கோடி மைல்கல்லை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: முறையான முதலீட்டு திட்டங்களுக்கு முதலீட்டாளர்களிடம் கிடைத்த வரவேற்பையடுத்து பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு செப்டம்பரில் ரூ.37 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. இதுகுறித்து பரஸ்பர நிதிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

மேலும், முதலீட்டாளர்களின் அபார வரவேற்பால் எஸ்ஐபி திட்டங்களில் முதலீட்டு வரத்து முதல் முறையாக ரூ.10,000 கோடி மைல்கல்லை தாண்டியுள்ளது. குறிப்பாக, நடப்பாண்டு ஆகஸ்டில் 4,32,44,048-ஆக இருந்த எஸ்ஐபி திட்ட கணக்குகளின் எண்ணிக்கையானது செப்டம்பரில் 4,48,97,602-ஆக உயர்ந்தது. இந்நிலையில், எஸ்ஐபி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ.9,923.15 கோடியிலிருந்து ரூ.10,351.33 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எஸ்ஐபி திட்டங்களில் நிர்வகிக்கப்படும் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.5,26,883 கோடியாக காணப்பட்ட நிலையில், அது, செப்டம்பரில் ரூ.5,44,976 கோடியாக அதிகரித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் பரஸ்பர நிதி முதலீட்டு கணக்குகளின் எண்ணிக்கை 89.15 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த அளவில் பரஸ்பர நிதியங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ.37 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது, 2020 செப்டம்பரில் ரூ.27.6 லட்சம் கோடியாக காணப்பட்டது. ஆக, ஒரே மாதத்தில் நிதியங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 33 சதம் வளர்ச்சி கண்டுள்ளதாக பரஸ்பர நிதிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Spread the love