August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

எஸ்.புதூர் வட்டார விவசாயிகளுக்கு நெல்லில் வீரிய நாற்றுகள் பெறு வதற்கு விதை நேர்த்தி உத்திகள் பற்றிய விளக்கம்

சிவகங்கை, ஜூலை 23

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி, நெல் விதைகளை விதைப்பதற்கு முன்பு விதை நேர்த்தி செய்து விதைப்பதன் மூலம் பூச்சு மற்றும் நோய் தாக்குதலின்றி வீரியமான நாற்றுகளை பெறலாம். நெல்லில் வெவ்வேறு தருணங்களுக்கு ஏற்ப கீழ்கண்டவாறு விதை நேர்த்தி முறைகள் உள்ளன. விவசாயிகள் தேவைக்கேற்ப விதை நேர்த்தி செய்து பயன்பெறலாம்.

நல்ல முளைப்பு திறன் மற்றும் வீரிய நாற்றுக்கான விதை நேர்த்தி
நெல் விதைகளை 10 – 12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து ஈர கோணிப் பைகள் நடுவில் 24 மணி நேரம் வரை வைப்பதன் மூலம் விதைகள் முளைகட்டும். இவ்வாறு 2 மில்லி மீட்டர் வரை முளைகட்டிய விதைகளை விதைப்பதன் மூலம் நல்ல முளைப்பு திறனுடன் வீரியமான நாற்றுகளை பெறலாம்.

விதை தரம் மேம்படுத்தல்
பொக்கு விதைகளுடன், முளைப்பு திறன் குன்றிய விதைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு உப்பு கரைசல் மூலம் தரமான விதைகளை பிரித்தெடுக்கலாம். ஒன்றரை கிலோ சமையல் கல்லுப்பை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். இக்கரைசலில் விதைகளை கொட்டி கலக்குவதன் மூலம் பொக்கு விதைகள் மற்றும் தரம் குன்றிய விதைகள் மிதந்தும், தரமான விதைகள் கீழே படிந்தும் காணப்படும். இதில் மிதக்கும் விதைகளை அப்புறப்படுத்தி, கீழே படிந்திருக்கும் தரமான விதைகளை மேல் படிந்திருக்கு உப்புகளை நீக்க நல்ல நீரில் பலமுறை நீரை மாற்றி அலச வேண்டும். இவ்வாறு பிரித்தெடுத்த விதைகளை மேலே கூறியவாறு முளைக்கட்டி விதைப்பதன் மூலம் அதிக முளைப்பு திறனுடன் வீரியமான நாற்றுகளை பெறலாம்.

விதை உரக்கம் நீக்குதல்
நெல் இரகங்களில் பொதுவாக இரண்டு அல்லது மூன்று மாத சேமிப்பு காலங்களில் விதை உரக்கம் நீங்கிவிடும். விதைப்பதற்கு முன்பு விதை உறக்கம் இருப்பதாக அறிந்தால் 0.5 சதவிகித பொட்டாசியம் நைட்ரேட் கரைசலில் 12 – 16 மணி நேரம் ஊற வைப்பதன் மூலம் விதை உரக்கத்தை நீக்கலாம்.

உயிர் உரம் விதை நேர்த்தி

துகள் உயிர் உரம்

துகளாக இருக்கும் உயிர் உரங்களை கீழ்கண்டவாறு பரிந்துரை செய்யப்படுகிறது.
(1) அசோஸ்பைரில்லம் – 400 கிராம் / ஏக்கர்
பாஸ்போ பாக்டீரியா – 400 கிராம் / ஏக்கர்
(அல்லது)
அசோபாஸ் – 400 கிராம் / ஏக்கர்
(2) சாம்பல் சத்து கரைக்கும் பாக்டீரியா (முளுடீ) – 400 கிராம் / ஏக்கர்
இத்துகள் உயிர் உரங்களை கீழ்கண்டவாறு இரண்டு முறைகளில் விதை நேர்த்தி செய்யலாம்.
மேற்கூறிய துகள் உயிர் உரங்களை தேவையான தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகளை அதில் 12 – 16 மணி நேரம் ஊற வைத்து பிறகு விதைகளை முளைக்கட்டி விதைக்கலாம். அவ்வாறு செய்யும் போது மீதமுள்ள கரைசலை நாற்றங்காலில் ஊற்றி விட வேண்டும்.
மேற்கூறிய துகள் உயிர் உரங்களை அரிசி கஞ்சியுடன் சேர்த்து விதைநேர்த்தி செய்து பிறகு 30 மணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்கலாம்.

திரவ உயிர் உரம்
திரவ உயிர் உரங்கள் ஒரு ஏக்கருக்கு அசோஸ்பைரில்லம் 50 மில்லி, பாஸ்போ பாக்டீரியா 50 மில்லி அல்லது அசோபாஸ் 50 மில்லி மற்றும் பொட்டாசியம் கரைக்கும் பாக்டீரியா 50 மில்லி ஆகியவைகளை ஒரு லிட்டர் ஆறிய அரிசி கஞ்சியுடன் ஒரு ஏக்கருக்கான விதையை கலந்து 30 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பிற்கான விதை நேர்த்தி
குலை நோய் தாக்குதல் காணப்படும் இடங்களில் விதைகளை கார்பன்டசிம் (அ) பைரோக்யுலோன் (அ) ட்ரைசைக்லோசோல் போன்ற பூஞ்சான கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை ஒரு லிட்டரில் 2 கிராம் கரைத்து ஒரு கிலோ விதையை 10 மணிநேரம் ஊற வைத்து விதைக்கலாம். இவ்வாறு விதைப்பதன் மூலம் 40 நாட்கள் வரை நாற்றுகளை குளைநோயிலிருந்து பாதுகாக்கலாம்.

இமிடாக்குளோபிரிட் 48மூ குளு – என்ற பூச்சி கொல்லியை 2 கிராம்/ஒரு கிலோ விதையில் கலந்து விதைப்பதன் மூலம் இளம் பருவத்தில் பூச்சி தாக்குதலை குறைக்கலாம்.

புளுதி விதைப்பு (அ) மானாவாரி விதைப்பிற்கான விதை நேர்த்தி
நெல்லில் புழுதியில் நேரடி விதைப்பு அல்லது மானாவாரி விதைப்பிற்கு விதைகளை கடினப்படுத்தி விதைக்கலாம். அதற்கு ஒரு சதவிகித பொட்டாசியம் குளோரைடு கரைசலில் விதை கரைசல் சம விகிதத்தில் 16 மணி நேரம் ஊற வைத்து பிறகு 13% ஈரபதத்திற்கு நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். இவ்வாறு கடினப்படுத்தப்பட்ட விதைகளை விதைப்பதன் மூலம் ஆரம்ப கட்ட வறட்சியை தாங்கி வளர கூடிய தன்மை இருக்கும்.

காரத் தன்மையுடைய மண்ணிற்கான விதை நேர்த்தி
காரத் தன்மையுடைய மண்ணில் விதை முளைப்புத்திறன் பாதிக்கப்படும். அந்நிலையில் விதைகளை 80 மைக்ரோ மோலார் சோடியம் நைட்ரோப்ருசைட் கரைசலில் 16 மணி நேரம் வைத்து நாற்றங்காலில் விதைத்தால் முளைப்புத்திறன் நன்றாக இருப்பதுடன் காரத்தன்மையை தாங்கி நாற்றுகள் வீரியமாக வளரும்.

குறிப்பு
உயிர் உரங்கள் மற்றும் உயிர் கட்டுப்பாட்டு காரணிகளை ஒன்றாக கலந்து விதை நேர்த்தி செய்யலாம். பூஞ்சான கொல்லி மற்றும் உயிர் கட்டுப்பாட்டு காரணிகளை ஒன்றாக சேர்த்து விதை நேர்த்தி செய்ய கூடாது.


Spread the love