August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

எஸ்.புதூர் வட்டார விவசாயிகளுக்கு பயறு வகைப் பயிர்களில் ஆடிப் பட்டத்திற்கேற்ற சாகுபடி தொழில்நுட்பங்கள்

சிவகங்கை, ஆக. 2

”ஆடிபட்டம் தேடி விதை” என்ற பழமொழி, ஆடி மாதத்தில் பயிர் சாகுபடியை காலம் தாழ்த்தாமல் தொடங்க வேண்டும் என்பதை நமக்கு எடுத்துக் கூறுகிறது. ஆடிப்பட்ட பயிர்கள் தென்மேற்கு பருவமழைக் காலங்களில் (ஜீன்-ஜீலை) விதைப்பு செய்யப்படுகின்றன. இப்பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பயறு வகைகளில் சீரிய சாகுபடி தொழில்நுட்பங்களை கையாள்வதன் மூலம் அதிக விளைச்சல் பெறலாம்.

பயறுவகைப் பயிர்கள்
பயறுவகைப் பயிர்களில் நல்ல விளைச்சல் பெற, பருவத்திற்கேற்ற உயர் விளைச்சல் தரும் இரகங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.

ஆடிப்பட்டத்திற்கேற்ற இரகங்கள்
வ.
எண் பயிர் ஆடிப்பட்டத்திற்கேற்ற இரகங்கள் (ஜீன்-ஆகஸ்ட்) விதையளவு கிலோ / ஏக்கர்

  1. துவரை CO8, CO9 2-3 கிலோ / கலப்பு பயிர் – 1.25 கிலோ
  2. உளுந்து VBN 6, VBN 8 8 கிலோ / கலப்பு பயிர் – 4 கிலோ
  3. பாசிப்பயறு CO (Gg)7, VBN (Gg) 2, VBN (Gg) 3, CO 8, VBN 4 8 கிலோ / கலப்பு பயிர் – 4 கிலோ
  4. தட்டைப்பயறு CO (CP) 7 10 கிலோ

· தரமான சான்று பெற்ற விதைகளை விதைநேர்த்தி செய்து பயன்படுத்த வேண்டும்.
· விதைப்பதற்கு 24 மணிநேரத்திற்கு முன்னர் கார்பென்டசிம் 2 கிராம் / கிலோ அல்லது டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் / கிலோ அல்லது சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் 10 கிராம் / கிலோ விதை என்ற அளவில் முதலில் விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
· பின்னர் 2 பாக்கெட் ரைசோபியம் மற்றும் 2 பாக்கெட் பாஸ்போபேக்டீரியாவுடன் அரை லிட்டர் ஆறிய வடிகஞ்சியுடன் கலந்து, நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.
· திரவ உயிர் உரமாக இருப்பின் 50 மி.லிட்டர் ரைசோபியம் மற்றும் 50 மிலி பாஸ்போபேக்டீரியா இரண்டையும் கலந்து உலர்ந்த பின் விதைக்க வேண்டும்.
· நுண்ணுயிர் உரம் பயன்படுத்துவதால் மண்ணின் வளம் பாதுகாக்கப்படுவதோடு விளைச்சலும் 25 சதவீதம் அதிகரிக்க கூடும்.
· பரிந்துரைப்படி பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும். இதனால் செடிகளுக்கு இடையே இடம், சூரிய ஒளி, நீர், உரம் ஆகியவற்றிற்கு போட்டியின்றி வளரும்.

களை நிர்வாகம்
· 3-வது நாளில் மண்ணில் ஈரம் இருப்பின் பென்டிமெத்தலின் ஏக்கருக்கு 1 லிட்டரை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
· 35-வது நாளில் களைக்கொத்து கொண்டு களையெடுக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்
· இறவைப் பயிருக்கு விதைத்தவுடனும், மூன்றாம் நாளும் நீர்ப்பாய்ச்ச வேண்டும். பின்னர் தேவைக்கேற்ப 10-15 நாட்களுக்கொருமுறை நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
· பயறுவகைப் பயிர்களுக்கு எந்த பருவத்திலும் நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

இலைவழி உரம்
நெல் தரிசில் பயிரிடப்படும் பயிர்களில், பூக்கள் உதிர்வதைத் தடுக்க 2 சதவீத டி.ஏ.பி கரைசலும், 40 பி.பி.எம் நாப்தலின் அசிட்டிக் அமிலம் கலந்து பூக்கள் பூக்க ஆரம்பித்தவுடன் ஒரு முறையும், 15 நாட்கள் கழித்து மறுமுறையும் தெளிக்க வேண்டும் அல்லது ஏக்கருக்கு பயறு ஒண்டர் 2 கிலோவை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பூக்கள் பூக்க ஆரம்பித்தவுடன் தெளிக்க வேண்டும்.

பயறுவகைப் பயிர்களில் ஆடிப்பட்டத்தில் மேற்கண்ட தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து நல்ல விளைச்சலையும், இலாபத்தையும் பெறலாம்.

இத்தகவலை சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி தெரிவித்தார்.

Spread the love