புது தில்லி, மே 4
கடந்த ஆறு மாதங்களாக, இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து அதிகளவில் முதலீடு செய்து வந்த அன்னிய முதலீட்டாளர்கள், கடந்த ஏப்ரல் மாதத்தில் தங்களது முதலீட்டை வெளியே எடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது: கடந்த ஏப்ரல் மாதத்தில், அன்னிய முதலீட்டாளர்கள், ரூ.9,659 கோடியை திரும்ப பெற்றுள்ளனர். இப்படி அதிகளவில் அன்னிய முதலீட்டாளர்கள்தங்கள் பங்குகளை விற்பனை செய்ததற்கு முக்கியகாரணம், கோவிட் தொற்றின் இரண்டாவது அலையாகும். மேலும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இவர்கள் சந்தை முதலீடுகளிலிருந்து, ரூ.7,782 கோடியை வெளியே எடுத்தனர். அதன் பிறகு இப்போது தான் மிகப் பெரிய அளவில் முதலீட்டை திரும்ப பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து, நடப்பு ஆண்டு மார்ச் வரையிலான காலத்தில், ரூ.1.97 லட்சம் கோடியை, அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில், நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டுமே, ரூ.55,741 கோடியை முதலீடு செய்திருந்தனர். கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அன்னிய முதலீட்டாளர்கள் அச்சம் காரணமாக முதலீட்டை வெளியே எடுப்பது தொடரக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.