புது தில்லி, மே 4
கடந்த ஏப்ரல் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 2.39 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து டிவிஎஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் நடப்பாண்டு ஏப்ரலில் மொத்தம் 2,38,983 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, முந்தைய மார்ச் மாத விற்பனையான 3,22,683 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 26 சதம் சரிவாகும்.
மேலும், மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் மொத்த இருசக்கர வாகன விற்பனை 3,07,437 என்ற எண்ணிக்கையிலிருந்து 2,26,193-ஆக குறைந்தது. குறிப்பாக, நடப்பாண்டு ஏப்ரலில் உள்நாட்டுச் சந்தையில் இருசக்கர வாகன விற்பனை 35 சதம் சரிவடைந்து 1,31,386-ஆனது. மார்ச்சில் இருசக்கர வாகன விற்பனை 2,02,155-ஆக இருந்தது.
அது மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு தேசிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏப்ரலில் உள்நாட்டு சந்தையில் விற்பனை எதுவும் நடைபெறவில்லை. இருப்பினும், அந்த மாதத்தில் 9,640 இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்தது. நடப்பாண்டு ஏப்ரலில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன ஏற்றுமதி 1,07,185-ஆக இருந்தது என டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.