புது தில்லி, ஏப்.23
நான்காவது காலாண்டில் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் 2 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜனவரி-மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 4வது காலாண்டில் இந்நிறுவனம் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.329 கோடியை ஈட்டியுள்ளது. கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ.156 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 2 மடங்கு அதிகமாகும் என தெரிவித்துள்ளது.
மேலும், மதிப்பீட்டு காலகட்டத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ.482 கோடியிலிருந்து 53 சதவீதம் உயர்ந்து ரூ.739 கோடியை எட்டியது. பங்குகள் மற்றும் அது குறித்த செயல்பாடுகள் மூலம் ஈட்டிய வருமானம் நான்காவது காலாண்டில் வலுவான நிலையில் இருந்தது. அதேபோன்று, தனியார் சொத்து நிர்வாகம், முதலீட்டு வங்கி வர்த்தகமும் சிறப்பாக அமைந்தது.
கடந்த 2020-21-ஆம் நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு இறுதி ஈவுத்தொகையாக ரூ.13.5 வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த நிதியாண்டுக்கு ஒட்டுமொத்த அளவில் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் ஈவுத்தொகை பங்கு ஒன்றுக்கு ரூ.21.5-ஐ எட்டியுள்ளதாக ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.