பெங்களூரு, மே 10
நாட்டில் கோவிட் 2வது அலை இந்திய மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், பெரு நிறுவனங்கள் தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் ஊழியர்களுக்கும், ஊழியர்களின் குடும்பத்திற்கும் செய்து வருகிறது.
இந்நிலையில், கோவிட் தொற்றுக் காரணமாக யஹச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ரூ.30 லட்சம் அளவிலான இன்சூரன்ஸ் கவர் மற்றும் ரூ.7 லட்சம் மதிப்பிலான ஊழியர் டெப்பாசிட் இன்சூரன்ஸ் கவர் அளிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் கோவிட் தொற்றுக் காரணமாக ஊழியர் உயிரிழக்கும் பட்சத்தில் இந்த இன்சூரன்ஸ் திட்டத்தின் முழுக் கவரேஜ்-ஐ ஊழியர்களின் குடும்பத்திற்கு யஹச்சிஎல் நிர்வாகம் வழங்குகிறது. அது மட்டும் அல்லாமல் கொரோனா மூலம் உயிரிழக்கும் ஊழியரின் ஒரு வருடத்திற்கான சம்பளத்தையும் ஊழியரின் குடும்பத்திற்கு அளிக்கப்படும் என யஹச்சிஎல் டெக்னாலஜிஸ் தெரிவித்துள்ளது.
இன்றைய நிலவரத்தின் படி ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் சுமார் 1,600 பேர் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு உள்ளனர், இதில் சிலர் மரணம் அடைந்தும் உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் கவர், ஒரு வருடம் சம்பளம் ஆகியவற்றைத் தாண்டி ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஊழியர்களின் குடும்பம் அனைத்து வகையிலும் மீண்டு வர சில முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 3 வருட மருத்துவக் காப்பீடு, குழந்தைகளின் கல்விக்கு 5 வருட காப்பீடு, இறந்தவரின் மனைவி அல்லது கணவன் விருப்பத்தின் அடிப்படையில் யஹச்சிஎல் நிறுவன பணியில் சேர்வதற்கான பயிற்சி ஆகிய அனைத்தும் அளிக்கப்படும் என யஹச்சிஎல் நிறுவனத்தின் தலைமை மனித வள பிரிவு அதிகாரியான விவி. அப்பாராவ் தெரிவித்துள்ளார்.