திருவாரூர், ஜூன் 23
திருவாரூர் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்புத்திட்டம் / வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் பள்ளிவாரமங்கலம் கிராமத்தில் 22.6.22 அன்று விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் மீன் வளர்ப்பு / பண்ணைகுட்டையில் மீன் வளர்ப்பு குறித்த தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியில் திருவாரூர் வட்டார மீன்வளத்துறை அலுவலர் பாஸ்கர், கலந்து கொண்டு விவசாயிகளுக்கு சரியான அளவுகளில் பண்ணை குட்டை அமைத்தல், மீன் குஞ்சுகளான கட்லா, ரோகு, மிர்கால், கண்ணாடி கெண்டை, புல் கெண்டை வகைகளை தேர்வு செய்தல், அவற்றிற்கு ஏற்றார் போல் பண்ணை குட்டைகளை அமைத்தல், மீன் வளர்ப்பில் நோய் மேலாண்மை செய்தல், மீன் எடையை அதிகரிக்க சத்துள்ள மீன் உணவு வழங்குதல், விற்பனை செய்தல் மற்றும் மீன்வளத்துறையில் மானியத்தில் பண்ணை குட்டை அமைத்தலுக்கான ஆலோசனைகள் மற்றும் விவசாயிகளின் கேள்விகளுக்கு தொழில்நுட்ப முறையில் ஆலோசனைகளை வழங்கினார்.
பயிற்சி ஏற்பாடுகளை திருவாரூர் வட்டார அட்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் செய்திருந்தார். அவர் கூறுகையில், விவசாயிகள் கூடுதல் வருமானம் பெறுவதற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் ஒரு சிறந்த இலாபம் தரக்கூடிய ஒன்றாகும். வாரம், மாதம் மற்றும் வருடாந்திர வருமானம் பெறுவதற்கு ஒரே பயிர் சாகுபடியினை மேற்கொள்ளாமல் விவசாயம் சார்ந்த தொழிலான பண்ணை குட்டை அமைத்தல், தேனீ வளர்த்தல், காளான் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு போன்ற இலாபம் தரக்கூடிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் கையாள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் விவசாயிகள் உழவன் செயலியினை பயன்படுத்தி பண்ணை இயந்திரங்களை வாடகைக்கு எடுத்தல், காலநிலை அறிதல், சந்தை நிலவரம் அறிதல், விதை இருப்பு நிலை, இடுபொருள் முன்பதிவு, பயிர்காப்பீடு விபரம், மானிய திட்டங்கள், உரம் இருப்பு விபரம் அறிதல், உழவர் அலுவலர் தொடர்பு திட்டம், பூச்சி நோய் கண்காணிப்பு பரிந்துரைகள், தரிசு நில மேம்பாடு, பட்டு வளர்ச்சி துறை போன்ற தொழில்நுட்ப ஆலோசனைகளை விவசாயிகள் அறிந்து கொண்டு விவசாயிம் மேற்கொள்ள கேட்டுக்கொண்டார்.
பயிற்சியில் பள்ளிவாரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்தி மற்றும் உழவர் நண்பர் ராஜராஜன் மற்றும் பள்ளிவாரமங்களம் விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சியினை வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்புத்திட்டம் (அட்மா) தொழில்நுட்ப மேலாளர்கள் மதுமிதா மற்றும் தமிழ்பிரியா ஆகியோர் பயிற்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். இறுதியில் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கும் பயிற்சியாளருக்கும் மதுமிதா நன்றி கூறினார்.