புது தில்லி, மே 15
இந்தியாவின் ஏற்றுமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 3,063 கோடி டாலராக முன்னேற்றம் கண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பாண்டு ஏப்ரலில் வெளிநாடுகளுக்கு 3,063 கோடி டாலர் மதிப்பிலான பொருள்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரலில் ஏற்றுமதி செய்யப்பட்ட 1,036 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் இது ஏறக்குறைய மூன்று மடங்கு அதிகமாகும். மேலும், ஏற்றுமதி அதிகரித்துள்ள அதேவேளையில், நாட்டின் இறக்குமதியும் 1,712 கோடி டாலரிலிருந்து 4,572 கோடி டாலராக அதிகரித்துள்ளது. ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகரித்துள்ளதையடுத்து நாட்டின் வர்த்தக பற்றாக்குறையானது 676 கோடி டாலரிலிருந்து 1,510 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
கோவிட் பெருந்தொற்றின் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்தாண்டு ஏப்ரலில் இந்தியாவின் ஏற்றுமதி வரலாறு காணாத அளவுக்கு 60.28 சதம் சரிவைச் சந்தித்தது. அதனுடன் ஒப்பிடும்போது 2021 ஏப்ரலில் ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் 195.72 சதத்தை எட்டியுள்ளது. நடப்பாண்டு மார்ச்சில் ஏற்றுமதி 60.29 சதம் அதிகரித்து 3,445 கோடி டாலராக காணப்பட்டது.
ஏப்ரலில் கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 466 கோடி டாலரிலிருந்து 1,080 கோடி டாலராக அதிகரித்துள்ளது. நவரத்தினங்கள்-ஆபரணங்கள், சணல், தரைவிரிப்பு, கைவினைப் பொருள்கள், தோல், மின்னணு சாதனங்கள், பிண்ணாக்கு, முந்திரி, பொறியியல் பொருள்கள், பெட்ரோலிய தயாரிப்புகள், கடல் உணவுகள் மற்றும் ரசாயனம் உள்ளிட்ட முக்கியப் பொருள்களின் ஏற்றுமதி ஏப்ரலில் நேர்மறை வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.