August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆயுள் காப்பீட்டு புதிய பிரீமியம் அதிகரிப்பு: ஐஆர்டிஏஐ தகவல்

மும்பை, மே 10

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் 45 சதம் வளர்ச்சியடைந்துள்ளதாக இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து ஐஆர்டிஏஐ மேலும், தெரிவித்துள்ளதாவது:

ஆயுள் காப்பீட்டு சேவையில் ஈடுபட்டுள்ள 24 நிறுவனங்களின் புதிய பிரீமியம் வசூல் 2021 ஏப்ரல் மாதத்தில் ரூ.9,738.79 கோடியாக இருந்தது. இது, 2020 ஏப்ரலில் வசூலான ரூ.6,727.74 கோடியுடன் ஒப்பிடும்போது 45 சதம் அதிகமாகும். மேலும், ஆயுள் காப்பீட்டு சேவையில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள பொதுத் துறையைச் சேர்ந்த எல்ஐசி நிறுவனத்தின் முதலாம் ஆண்டு பிரிமியம் அல்லது புதிய பிரீமியம் வசூல் 2021 ஏப்ரலில் 35.6 சதம் அதிகரித்து ரூ.4,856.76 கோடியைத் தொட்டுள்ளது. இது, கடந்தாண்டு ஏப்ரலில் ரூ.3,581.65 கோடியாக காணப்பட்டது.

மேலும், இதர தனியார் துறை நிறுவனங்களின் புதிய பிரீமியம் ஒட்டுமொத்த அளவில் 55 சதம் அதிகரித்து ரூ.4,882.04 கோடியாக இருந்தது. இது, 2020 ஏப்ரல் மாதத்தில் ரூ.3,146.09 கோடியாக இருந்தது. ஆயுள் காப்பீட்டு சந்தையில் எல்ஐசி நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு 49.87 சதம் என்ற அளவில் உள்ளது. இதர 23 நிறுவனங்களின் பங்களிப்பு 50.13 சதமாகும்.

மேலும், 24 நிறுவனங்களின் பாலிசிகளின் எண்ணிக்கையைப் பொருத்தவரையில் நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் 140 சதம் அதிகரித்து 9,96,933-ஆக இருந்தது. இதில், எல்ஐசி நிறுவனத்தின் பங்களிப்பு 275 சதம் அதிகரித்து 6,92,185-ஆக இருந்தது. இதர தனியார் துறை நிறுவனங்களின் பாலிசி விற்பனை 32 சதம் உயர்ந்து 3,04,748-ஆக இருந்தது என ஐஆர்டிஏஐ தெரிவித்துள்ளது.

Spread the love