புது தில்லி, மே 8
கடந்த ஏப்ரலில் மாதத்தில் கோவிட் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, உள்நாட்டு விமான பயணியர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, தர நிர்ணய நிறுவனமான, இக்ரா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனால், விமான நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இக்ரா தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கோவிட் பரவலை தடுக்க, பல மாநில அரசுகள் பயணியர் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளன. இதன் காரணமாக, கடந்த ஏப்ரல் மாதத்தில், உள்நாட்டு விமான சேவையில், பயணியர் எண்ணிக்கை, 29 சதம் குறைந்து, 55 – 56 லட்சம் என்ற அளவில் சரிவடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, மார்ச் மாதத்தி, 78 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த, 2020 செப்டம்பர் மாதத்துக்கு பின், முதன் முறையாக, நடப்பு மே 3ம் தேதி உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்தோர் எண்ணிக்கை, 1 லட்சத்திற்கும் குறைவாக இருந்தது. ஏப்ரலில், தினசரி விமான சேவை, 2 ஆயிரமாக குறைந்துள்ளது. இது, பிப்ரவரி, மார்ச் மாதங்களில், தலா, 2,300 ஆக இருந்தது. இதே காலத்தில், விமான பயணியர் எண்ணிக்கை, சராசரியாக, 109லிருந்து, 93 ஆக குறைந்துள்ளது.இவ்வாறு இக்ரா அறிக்கையில் தெரிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பல மாநிலங்கள் பொது முடக்கம் அறிவித்துள்ளதால், உள்நாட்டு விமான பயணியர் எண்ணிக்கை மேலும் குறையும் என்றும், இதனால், விமான நிறுவனங்களின் வருவாய் மேலும் பாதிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.