புது தில்லி, மே 10
கடந்த நிதியாண்டில் 10 பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த 2,118 கிளைகள் மூடப்பட்டன அல்லது இணைக்கப்பட்டன என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் கிடைத்த தகவலில் தெரியவந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் நீமுச் நகரைச் சேர்ந்த ஆர்வலர் சந்திரசேகர் கெளட் இந்த விவகாரம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அவருக்குக் கிடைத்த பதிலின்படி, கடந்த 2020-21 நிதியாண்டில் 10 பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த 2,118 கிளைகள் மூடப்பட்டன; அல்லது இதர வங்கிகளின் கிளைகளுடன் இணைக்கப்பட்டன. அதிகபட்சமாக பேங்க் ஆஃப் பரோடாவின் 1,283 கிளைகள் மூடவோ, இணைக்கவோ செய்யப்பட்டுள்ளன. பேங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி ஆகியவற்றின் எந்தவொரு கிளையும் அந்த கால அளவின்போது மூடப்படவில்லை. கடந்த நிதியாண்டில் 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக மத்திய அரசு ஒருங்கிணைத்தது. இதையடுத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை 12-ஆக குறைந்தது. வங்கிகள் இணைப்பை அடுத்து, இணைக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் மூடவோ, அல்லது இதர வங்கிகளின் கிளைகளுடன் இணைக்கவோ செய்யப்பட்டு வருகின்றன.