புது தில்லி, ஏப்.30
முன்னணி பொதுத்துறையைச் சேர்ந்த பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா கடந்த மார்ச் காலாண்டில் ரூ.165 கோடி தனிப்பட்ட நிகரலாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஏ.எஸ்.ராஜீவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:
வங்கியின் வட்டி வருமானம் 35 சதமும், இதர வருமானம் சிறப்பான அளவிலும் மார்ச் காலாண்டில் மேம்பட்டுள்ளது. இதையடுத்து, 2021 மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடந்த 4வது காலாண்டில் வங்கியின் தனிப்பட்ட நிகரலாபம் 165 கோடியாக இருந்தது. இது, வங்கி 2019-20ம் நிதியாண்டின் மார்ச் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.58 கோடியுடன் ஒப்பிடுகையில் 187 சதம் அதிகமாகும். கடந்த 2020-21வது முழு நிதியாண்டில் வங்கி ஈட்டிய நிகரலாபம் ரூ.389 கோடியிலிருந்து 42 சதம் வளர்ச்சி கண்டு ரூ.550 கோடியை எட்டியுள்ளது.
அதேபோன்று, வங்கியின் மொத்த வர்த்தகதம் 15 சதம் உயர்ந்து ரூ.2,81,659 கோடியைத் தொட்டுள்ளது என்றார் அவர்.