January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கடனுதவி திட்டங்களை விரைவுபடுத்த வங்கிகளுக்கு ஆர்பிஐ அறிவுறுத்தல்

மும்பை, மே 20

கோவிட் தொற்று பேரிடரால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிக்க அறிவிக்கப்பட்ட தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கான கடனுதவித் திட்டங்களை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுத் துறை வங்கிகளை ஆர்பிஐ கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து, பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக இயக்குநர்கள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகளுடன் காணொலி வழியில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த அறிவுறுத்தலை ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் வழங்கினார். கோவிட் நெருக்கடி நிலையை எதிர்கொள்ளும் வகையில் சில பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை ஆர்பிஐ இம்மாத தொடக்கத்தில் அறிவித்தது. குறிப்பாக, மருத்துவமனைகள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு தொய்வின்றி கடனுதவி அளிக்கும் வகையில் வங்கிகளுக்கு சிறப்புச் சாளர திட்டத்தின் கீழ் ரூ. 50,000 கோடி வழங்கப்படும். இந்த கடனுதவித் திட்டம் 2022 மார் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்ற அறிவிப்பை ஆர்பிஐ வெளியிட்டது.

இது குறித்த ஆர்பிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கோவிட் பேரிடரால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிக்க ஆர்பிஐ அறிவித்துள்ள இந்த கடனுதவித் திட்டங்களை விரைந்து நடைமுறைப்படுத்துமாறு வங்கி அதிகாரிகளிடம் ஆளுநர் அறிவுறுத்தினார். வங்கிகளின் இருப்பிநிலை பின்னடைவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், நிதி நிறுவனங்களின் இப்போதைய நிலை, சிறு-குறு நிறுவனங்கள் உள்பட பல்வேறு துறையினருக்கு வழங்கப்படும் கடன் திட்டங்கள், கோவிட் பேரிடர் தொடர்பாக ஆர்பிஐ அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் என்பன உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

Spread the love