August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கம்பு தானியத்திலுள்ள ஊட்டச் சத்துக்கள் மற்றும் மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழில் நுட்பங்கள்

கம்பு தானியத்தில் மற்ற சிறு தானியங்களை விட அதிகமான சக்தி உள்ளது. 75% செறிவுறா கொழுப்பு உள்ளது. லின்ஒலியிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. கோதுமையில் இருக்கும் புரதத்தை போல சம அளவு புரதம் கம்பு தானியத்தில் உள்ளது. புரோலமைன் என்ற புரதம் அதிக அளவில் உள்ளது. மெக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர் உள்ளன. அதிகமான கால்சியம் உள்ளது. வைட்டமின் இ, போலேட், ரிபோபிலேவின் மற்றும் ஏனைய பி வகை வைட்டமின்கள் உள்ளன. பிற தானியங்களை விட அதிக அளவு நயசின், போலிக் அமிலம், கொழுப்பு உள்ளது. கரோட்டீன் காணப்படுகிறது. இரும்பு, துத்தநாகம் லைசின் பிற தானியங்களை விட அதிக அளவு உள்ளன. நார்ச்சத்து உள்ளது. கொலஸ்டிராலை குறைக்க கூடிய தாவர வேதிப்பொருட்கள் உள்ளன.
கம்பு தானியத்திலிருந்து ஊட்டச்சத்து நி[றைந்த பல வகையான உணவுகளை தயாரிக்கலாம்.

கம்பு மால்ட் மாவு
கம்பு தானியங்களை அறை வெப்ப நிலையில் 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஒவ்வொரு இரண்டு மணி நேரமும் தண்ணீரை மாற்ற வேண்டும். தண்ணீரை வடித்து விட்டு 37° செ.கி. வெப்ப நிலையில் 48 மணி நேரம் முளை கட்ட வேண்டும். பின்பு மின் உலர்த்தியில் 50° செ.கி. வெப்ப நிலையில் 24 மணி நேரம் உலர்த்த வேண்டும். இயந்திரத்தின் மூலம் உமியை நீக்கி, மாவாக அரைத்து 390 மைக்ரான் சல்லடையில் சலிக்க வேண்டும். இந்த மாவினை இணை உணவு தயாரிக்க பயன்படுத்தலாம்.

கம்பு இணை உணவு
முளை கட்டிய கம்பு மாவு – 50 கிராம், கோதுமை மாவு – 30 கிராம், வறுத்த அரிசி மாவு – 10 கிராம், கொழுப்பு நீக்கிய பால் பவுடர் – 5 கிராம், சர்க்கரை பொடி – 5 கிராம். கோதுமை மாவினை 80 முதல் 100 கண்ணி சல்லடையில் சலிக்க வேண்டும். அரிசியை 60° செ.கி. வெப்ப நிலையில் வறுத்து மாவாக அரைத்து 80 முதல் 100 கண்ணி சல்லடையில் சலிக்க வேண்டும்.

கம்பு தோசை
கம்பு 180 கிராம், தோல் நீக்கிய உளுந்து 180 கிராம், அரிசி 150 கிராம், வேக வைத்த அரிசி சாதம் 40 கிராம், வெந்தயம் 1 தேக்கரண்டி, உப்பு மற்றும் எண்ணெய் தேவையான அளவு. கம்பு தானியத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து 4 முதல் 5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். உளுந்து, அரிசி, வேக வைத்த அரிசி சாதம், வெந்தயம் ஆகியவற்றை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். தேவையான தண்ணீர் சேர்த்து ஊறிய தானியங்களை அரைக்க வேண்டும். 5 முதல் 6 மணி நேரம் நொதிக்க வைக்க வேண்டும். இந்த மாவை உபயோகப்படுத்தி தோசை தயாரிக்கலாம்.

கம்பு அவல்
கம்பு தானியங்களை சுத்தம் செய்து 5 முதல் 6 மணி நேரம் வெயிலில் உலர வைக்க வேண்டும். ஒரு கிலோ தானியங்களுக்கு 50 மி . லி தண்ணீர் சேர்த்து 3 மணி நேரம் கொள் கலனில் அடைத்து நிலைப்படுத்த வேண்டும். இயந்திரத்தின் மூலம் உமி நீக்கி, சலித்து தரம் பிரித்து சூரிய ஒளியில் முதல் 6 முதல் 8 மணி நேரம் வெயிலில் உலர வைக்க வேண்டும். உமி நீக்கப்பட்ட கம்பு[ தானியங்களை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். 15 நிமிடம் நீராவியில் வேக வைக்க வேண்டும். 70° செ.கி. வெப்ப நிலையில் மின் உலர்த்தியில் 1 மணி நேரம் உலர வைக்க வேண்டும். இயந்திரத்திலிட வேண்டும். பின்பு அவல்களை 45 நிமிடம் உலர்த்தியில் உலர வைக்க வேண்டும். தரம் பிரித்து காற்று புகாமல் அடைத்து சேமிக்க வேண்டும்.

கம்பு கேக்
மைதா 70 கிராம், கம்பு மாவு 30 கிராம், பேக்கரி @பேட் 50 கிராம், சர்க்கரை பொடி 50 கிராம், பேக்கிங் பவுடர் 0.5 கிராம் ஆகிய பொருட்கள் சேர்த்து கம்பு கேக் தயாரிக்கலாம்.

கம்பு ரஸ்க்
கம்பு மாவு 100 கிராம், வெண்ணெய் 100 கிராம், பேக்கிங் பவுடர் 3 கிராம், முட்டை 3, சர்க்கரை 50 கிராம், வெனிலா எஸன்ஸ் 1 தேக்கரண்டி, மஞ்சள் உணவு நிற பொடி சேர்த்து கம்பு ரஸ்க் தயாரிக்கலாம். வெண்ணெய், சர்க்கரை, முட்டை சேர்த்து கலக்க வேண்டும். இதனுடன் கம்பு மாவு, பேக்கிங் பவுடர், வெனிலா எஸன்ஸ், மஞ்சள் உணவு நிற பொடி சேர்த்து கலக்க வேண்டும். பேக்கிங் பாத்திரத்திலிட்டு 180° செ.கி. வெப்ப நிலையில் அடுமனை அடுப்பில் 30 முதல் 40 நிமிடம் வைக்க வேண்டும். ஆறிய பிறகு துண்டுகளாக நறுக்கி அடுமனை அடுப்பில் 160° செ.கி. வெப்ப நிலையில் மொறுமொறுப்பாகும் வரை வைக்க வேண்டும்.

கம்பு கடலை மாவு லட்டு
கம்பு மாவு 100 கிராம், கடலை மாவு 50 கிராம், கோதுமை ரவை 50 கிராம், சர்க்கரை 100 கிராம், ஏலக்காய் 1 தேக்கரண்டி, நெய் 50 கிராம், உலர்ந்த பழங்கள் 20 கிராம். கம்பு மாவு,கடலை மாவு, கோதுமை ரவை ஆகியவற்றை தனித்தனியே வறுத்து ஒன்றாக கலக்க வேண்டும். நெய், உலர்ந்த பழங்கள், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து லட்டு உருண்டைகளாக பிடிக்க வேண்டும்.

கம்பு தானிய ரவை
கம்பு தானியங்களை 10 முதல் 12 மணி நேரம் தண்ணீரில் 30% ஈரப்பதம் வரும் வரை ஊற வைக்க வேண்டும். பின்பு 20 நிமிடம் ஆவியில் வேக வைக்க வேண்டும். பின்பு 12 % ஈரப்பதம் வரும் வரை உலர வைக்க வேண்டும். இயந்திரத்தின் மூலம் உமியை நீக்கி, அரைத்து, சல்லடையின் மூலம் சலித்து வெவ்வேறு அளவுள்ள தானிய துகள்களாக தரம் பிரிக்க வேண்டும். 0.336 மி.மீ அளவு
மைக்ரான் சல்லடையில் சலிக்கப்பட்ட கம்பு தானியங்களை ரவையாக பயன்படுத்தலாம்.

கம்பு பொரி
கம்பு தானியங்களை 5 முதல் 6 மணி நேரம் வெயிலில் உலர வைக்க வேண்டும். ஒரு பங்கு தானியத்திற்கு ஒன்றரை பங்கு தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தண்ணீரை வடித்து விட்டு 30 நிமிடம் நிலைப்படுத்த வேண்டும். பாதுகாப்பான் சேர்த்து உலர வைத்து கம்பு தானியங்களை பாப்கார்ன் இயந்திரத்தில் பொரித்தெடுக்க வேண்டும்.
இத்தொழில் நுட்பங்களை பயன்படுத்தி ஊட்டச்சத்துள்ள கம்பு உணவுகளை தயாரிக்கலாம். மேலும் கம்பு தானியங்களை மதிப்புகூட்டி சந்தைப்படுத்தலாம்.

தகவல் : முனைவர் செ.ஜேசுப்பிரியா பூர்ணகலா, உதவி பேராசிரியர் (உணவியல் மற்றும் ஊட்டச்சத்தியல்), வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை.

Spread the love