August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கம்பு பயிரில் அடிச்சாம்பல் நோய் மேலாண்மை முறைகள்

கம்பு ஒரு தானியப் பயிராகும். இவை நன்செய் மற்றும் புன்செய் நிலங்களில் நன்கு வளரும். கம்பு இந்தியாவில் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. இவை மானாவாரியாகவும் மற்றும் நீர்ப்பாசனத்தின் மூலமும் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. இப்பயிரானது ஆப்ரிக்கக்கண்டத்தில் தோன்றி 40க்கும் மேற்பட்ட நாடுகளில் சாகுபடி செய்யப்படுகிறது. கம்பு மனிதர்களுக்கு உணவாகவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் மற்றும் எரிபொருளாகவும் பயன்படுகிறது. ஆனால் தற்பொழுது கம்பு பயிரை பல நோய்கள் தாக்கி மகசூலை குறையச் செய்கிறது. அவற்றுள் ஒன்று அடிச்சாம்பல் நோயாகும். அடிச்சாம்பல் நோய் பற்றி காண்போம்.

நோயின் அறிகுறிகள்
• இலைகளின் அடிப்புறபகுதியில் வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்துடன் கூடிய பூஞ்சை காணப்படும். பாதிக்கப்பட்ட இலைகளின் மேற்புறம் பச்சையத்தை இழந்து மஞ்சள் நிறத்துடன் காணப்படும்.
• பாதிக்கப்பட்ட செடிகளில் கதிர்கள் வெளிப்படுவதில்லை அவ்வாறு வெளிப்பட்டாலும் முழுவதுமோ அல்லது கதிரின் ஒரு பாகமோ தானியங்களுக்கு பதிலாக நீண்ட சிறிய இலை போன்ற வளர்ச்சியைக் கொண்டிருக்கும்.
• கதிர்களின் முழுவதும் தானியங்களுக்கு பதிலாக பசுமை நிறத்துடன் கூடிய சிறிய இலைப் போன்ற பாகங்கள் காணப்படுவதால் “பசுங்கதிர் நோய்” என்று அழைக்கப்படுகிறது.

நோய்காரணி
ஸ்கிலிரோஸ்போராகிராமனிகோலா என்ற பூஞ்சையின் மூலம் இந்நோயானது தோற்றுவிக்கின்றன.

நோய் பரவும் முறைகள் மற்றும் காலநிலைகள்
• இந்நோயானது முதலில் மண் மூலமாகவும், பின்பு தாக்கப்பட்ட விதையின் மூலம் பரவுகிறது.
• காற்றின் ஈரப்பதம் >75% மற்றும் வெப்பநிலை 15 – 25֯C என்ற காலநிலைகளாகும்.

நோய் மேலாண்மை
• நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட ரகங்களான கோ 7 , டபிள்யூ சிசி 75 சாகுபடிக்கு பயன்படுத்தலாம்.
• நாற்றங்கால் அமைத்து நாற்றுகளைப் பறித்து நடவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பயிரை நடவு செய்யும்போது நீக்கிவிடவேண்டும்.
• நேரடி விதைக்கப்பட்ட வயலில் 45 நாட்களுக்கு பிறகு பயிர் களைந்தெறிய வேண்டும். அப்பொழுது நோயினால் தாக்கப்பட்ட பயிர்களை நீக்கிவிடவேண்டும்.
• விதைப்பதற்கு முன் கேப்டான் அல்லது திராம் 4 கிராம்/கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்யவேண்டும்.
• தாக்கப்பட்ட வயலுக்கு மெட்டாலக்சில் 4 கிராம்/லிட்டர் அல்லது மெட்டாலக்சில் + மேங்கோசெப் 3 கிராம்/லிட்டர் என்ற அளவில் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம்.

தகவல் : இரா. ஜெயசங்கரமூர்த்தி, (முதுகலை வேளாண்மை), கோழிப்பட்டு, விழுப்புரம் மாவட்டம். 89404 75344, agrijay102@gmail.com மற்றும் செ. புகழேந்தி (இளங்கலை வேளாண்மை)
அகரக்கோட்டாலம், கள்ளக்குறிச்சி மாவட்டம். 97894 31318, pugazh1603@gmail.com

Spread the love