June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கரும்பில் “பொக்கோ போயிங்” நோயின் தாக்குதலும் தீர்வு காணுதலும்

விழுப்புரம், ஜூன் 6

தமிழ்நாட்டில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கரும்பு ஒரு முக்கிய பயிராக பயிர் செய்து வருகின்றனர். பெரியசேவலை, செங்கல்ராயன் கூட்டுறவு கரும்பு ஆலையின் கீழ் வரும் விழுப்புரம் மாவட்டம், அரசூர் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கரும்பு விவசாயிகள் கரும்பு பயிரில் இளம் இலைகள் சுருக்கம் அடைந்து வளர்ச்சி குன்றி காணப்படுவதாக கரும்பு அலுவலர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில் கரும்பு அலுவலர் பொன்னுரங்கம், கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவரிடம் வல்லுநர்கள் குழுவாக வந்து பாதிக்கப்பட்ட கரும்பு பயிர்களை பார்வையிட்டு தகுந்த ஆலோசனை வழங்குமாறு தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கரும்பு ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் த.சசிகுமார், தலைமையில் உதவி பேராசிரியர்கள் தி.திருமுருகன், செ.தங்கேஸ்வரி மற்றும் R.அனிதா ஆகியோர் சேர்ந்த குழு செங்கல்ராயன் கூட்டுறவு கரும்பு ஆலை அலுவலர்களான பொன்னுரங்கம் மற்றும் முருகேசன் ஆகியோருடன் சேர்ந்து வயலுக்கு சென்று ஆய்வு செய்ததில் கரும்பு பயிரானது “பொக்கோ போயிங்” என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அதனுடன் மாவுப் பூச்சியின் தாக்குதல் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு கீழ்காணும் பாதுகாப்பு/கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கையாளுமாறு விவசாயிகளுக்கு பரிந்துரைத்தனர். “பொக்கோ போயிங்” நோயானது புசோரியம் என்ற பூசண நோய்க் காரணியால் உருவாகிறது. சில சமயங்களில் சாறு உறிஞ்சும் பூச்சியான மாவுப்பூச்சியும் ஒருவிதக் காரணியாக செயல்படுகிறது. மூன்று மாதப்பயிரில் இருந்து பயிர் முதிர்ச்சி வரை தாக்கக்கூடியது. பூசண நோய்க்காரணிகளை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு கார்பன்டாசிம் 1 கிராம் (அல்லது) மேன்கோசெப் 3 கிராம் என்ற அளவில் பூசணக் கொல்லி மருந்துகளை ஒரு மில்லி ஒட்டும் திரவத்துடன் 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறை தெளிக்கவும். சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.8 கிராம் இமிடக்ளோபிரிட் 17.8 SL என்ற மருந்தை ஒரு மில்லி ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்கவும். நோய்த் தாக்கப்பட்ட கரும்புகளை அகற்ற வேண்டும். மேலும் மாமந்தூர், சித்தாம்பூர், கருவேப்பிலைபாளையம் மற்றும் பேரங்கியூர் ஆகிய கிராமங்களில் உள்ள கரும்பு வயல்களை பார்வையிட்டதில் செவ்வழுகல் நோயின் தாக்கமும் காணப்பட்டது.

Spread the love