August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கரும்பு பயிரில் கரிப்பூட்டை நோய் மேலாண்மை முறைகள்

தமிழ்நாட்டில் பயிரிடப்படும் பயிர்களில் கரும்பு ஓர் முக்கிய பணப்பயிராகும். தமிழ்நாட்டின் தட்பவெப்பநிலை கரும்பு சாகுபடிக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.அகில இந்தியாவில் கரும்பு பயிரின் சராசரி மகசூல் 60 முதல் 70 டன்களாகும். ஆனால் தமிழ்நாட்டில் கரும்பின் சராசரி மகசூல் 104 டன்களாகும். ஆதலால் கரும்பானது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. ஆனால் தற்பொழுது விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல பகுதியில் கரும்பில் கரிப்பூட்டை நோயின் தாக்கம் தென்படுகிறது. இதனால் பெரிதும் மகசூல் இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனால் இந்த நோயின் அறிகுறிகள் மற்றும் மேலாண்மை முறைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நோயின் அறிகுறிகள்:
● நோயினால் பாதிக்கப்பட்ட கரும்பின் நுனிக்குருத்துகள் கருமை நிறத்தில் சாட்டை போன்று காணப்படும்.
● சாட்டை ஐந்து அடி நீளம் வரையிலும், வெளியில் வெண்மையான சருகு போன்ற தோலினால் மூடப்பட்டிருக்கும்.
● நுனிக்குருத்தின் வளர்ச்சி தடைப்படுவதல் அதிகமான துர்கள் தோன்றி புதர் போல் காணப்படும்.
● கருமை நிற சாட்டையில் எண்ணிலடங்கா கருமை நிற பூசண வித்துக்கள் காணப்படும்.
● கணுவிடைப் பகுதிகளின் வளர்ச்சி குறைவதால் கரும்புகள் குட்டையாக காணப்படும்.
● இந்த நோயின் தாக்கம் கட்டை பயிர்களில் அதிகம் இருக்கும்.

பரவும் விதம்:
● நோயினால் தாக்கப்பட்ட கரனைகள், காற்று, மண் மற்றும் நீர் மூலம் பரவுகிறது.

நோய்காரணி மற்றும் ஏற்ற காலநிலைகள்:
யூஸ்டிலாகோ சிட்டாமினியோ என்ற பூஞ்சணத்தினால் இந்நோய் ஏற்படுகிறது. இந்நோயானது 1877ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்நோய் இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் இந்நோய் பரவி காணப்படுகிறது.
● 30-35℃ வெப்பநிலை மற்றும் 80-90 சத காற்றின் ஈரப்பதம் ஏற்ற காலநிலைகளாகும்.

மேலாண்மை முறைகள்:
உழவியல் முறைகள்:
● எதிர்ப்பு திறன் கொண்ட கோ.சி22, கோ.எஸ்.ஐ6, கோ.க6 மற்றும் கோ 86249 போன்ற இரகங்களை பயிரிடலாம்.
● தொடர்ந்து கரும்பு மற்றும் கட்டை பயிர் சாகுபடி செய்யக்கூடாது.
● கரும்பு பயிரின் வரிசைகளுக்கிடையே துவரை பயிரிடலாம்.
● பயிர் சுழற்சி முறையில் கரும்பை தொடர்ந்து பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிடலாம்.
● கருமை நிற சட்டைகளை சேகரித்து எரித்து விட வேண்டும்.

இயற்பியல் முறைகள்:
● விதைக்கரனைகளை 50℃ வெப்பநிலையில் அரை மணி நேரம் அல்லது 52℃ வெப்பநிலையில் 18 நிமிடங்கள் கரனை நேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும்.
● சாட்டைகளை கோணி அல்லது பாலித்தின் பையினுள் நுழைத்து காற்றின் மூலம் பூஞ்சணம் பரவுதலை தடுக்கலாம்.

இரசாயன முறைகள்:
● 0.1சத ப்ரோப்பிகோனோசொல் கரைசலில் விதை கரனைகளை ஒரு மணி நேரம் நேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும்.
● கார்பாக்சின் மற்றும் திரம் என்ற பூஞ்சணக்கொல்லியை 3மி.லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு: இரா.ஜெயசங்கர்மூர்த்தி, (முதுகலை வேளாண்மை), கோழிப்பட்டு, விழுப்புரம் மாவட்டம், கைபேசி: 89404 75344, மின்னஞ்சல்: agrijay102@gmail.com.
தே.பாரதி, (இளங்கலை வேளாண்மை), வடக்கனந்தல், கள்ளக்குறிச்சி மாவட்டம், கைபேசி: 63854 02522, மின்னஞ்சல்: bharathibe2018@gmail.com

Spread the love