June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கரும்பு பயிரில் களை நிர்வாகம்

சிவகங்கை, ஏப்.18

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டாரம் விரிவாக்க சீரமைப்புத் திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் தேவகோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கரும்பு பயிரில் கடைபிடிக்க வேண்டிய களை நிர்வாகம் பற்றிய தொழில்நுட்பங்களை பின்வருமாறு விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

களை மேலாண்மையில் பல்வேறு அணுகுமுறைகளாகிய இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பயன்படுத்துதல், பயிர் மற்றும் சாகுபடி முறை, களைக்கொல்லி மற்றும் ஒருங்கிணைந்த களை நிர்வாகம் போன்ற முறைகளால் களை நிர்வாகம் செய்ய முடியும்.

கரும்பு சாகுபடியில் இயந்திரங்கள் மற்றும் கருவிகளில் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. இவற்றில் முக்கியமாக உழவு கருவிகள், நிலம் தயாரிக்கும் கருவிகள் பயன்படுத்துப்பட்டு களைகள் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தப்படுகின்றன.

பயிர் சாகுபடி முறையில் பயிர் சுழற்சி, போட்டிபோடக் கூடிய பயிர்கள், சுத்தமான சாகுபடி, கவர்ச்சிப் பயிர் ஆகியவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இவற்றால் களைகளின் வாழ்க்கை சுழற்சியில் இடையூறுகள் ஏற்பட்டு தாக்குதல் குறைக்கப்படுகின்றது. ஊடுபயிர்களும், களைகள் போட்டியிடும் தன்மையைக் குறைக்கின்றன. களைக் கொல்லியைப் பயன்படுத்தும் பொழுது சிபாரிசு செய்யப்பட்ட களைக்கொல்லி, நீரின் அளவு, களைகளின் தாக்கம், கிடைக்கக்கூடிய களைக்கொல்லியின் விகிதம், பயன்படுத்தும் தெளிப்பான், ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் பயிரின் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு களைக் கொல்லியைப் பயன்படுத்த வேண்டும்.

உழவியல்முறை கட்டுப்பாடு
· உளுந்து, பாசிப்பயறு, சோயாமொச்சை, வெங்காயம், சணப்பை போன்றவற்றை பயிரிடுவதன் மூலம் களைகளின் வளர்ச்சியை தடுக்கலம்.
· இயற்பியல் முறை கட்டுப்பாட்டில் களைக்கொல்லிகள் பயன்படுத்த இயலாத சுழ்நிலைகளில் ஐ_னியர் கலப்பை கொண்டு வாய்க்கால் மற்றும் மேடுகளில் கரும்பு நட்ட 25, 55 மற்றும் 85 நாட்களில் இடையுழவு பயிரின் வரிசைகளுக்கு இடையே களைகளை கைக்கொத்து கொண்டு எடுக்க வேண்டும்.
· இல்லாவிடில் பவர்டில்லர்களில் பொருத்தப்பட்ட கரும்பு கொழு கலப்பை கொண்டு உழ வேண்டும்.
களைக்கொல்லி மூலம் கட்டுப்பாடு
· க்ளைபோசேட் நீண்ட நாட்கள் வளரக் கூடிய களைகளாகிய அருகு, கோரை, ஜான்சன் கிராஸ் போன்றவற்றை கட்டப்படுத்தும், கரும்பு நடவிற்கு 21 நாட்கள் முன்னர் கிளைபோசேட் களைக்கொல்லியை ஒரு எக்டருக்கு 2.0 கிலோ என்ற அளவில் 2 சதவீதம் அமோனியம் சல்பேட் உரத்துடன் சேர்த்து கோரை களைகளின் மேல் தெளித்து பின்னர் கரும்பு நடவு செய்த 30ம் நாள் 2.0 கிலோ / எக்டர் + 2 சத அமோனியம் சல்பேட் கரைசலை மறைப்பான் பாதுகாப்பு பொருத்தப்பட்ட கைதெளிப்பான் கொண்டு கோரை களைச் செடிகளின் மேல் தெளிப்பதன் மூலம் கோரை களையினைக் கட்டப்படுத்தலாம்.
· வேலையாட்களைக் கொண்டோ, கருவிகள் மூலமாகவோ நடவுக்குப் பின் 30,60 மற்றும் 90- வது நாட்களில் களையெடுத்தல் மிகவும் அவசியம்.

  1. அட்ரசின் 800 கிராம் அல்லது ஆக்ஸிபுளுர்பென் 300 மில்லி / ஏக்கர் என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து நடவு செய்த 3 ம் நாள் விசிறி அல்லது டிப்ளெக்டர் நாசில் பொருத்தப்பட்ட கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவும்.
  2. களைச்செடிகள் முளைக்கும் முன் தெளிக்கப்படும் களைக்கொல்லிகளை தெளிக்காவிட்டால், களை முளைத்த பின்னர் தெளிக்கக் கூடிய கிராமக்ஸோன் 1.0 லிட்டர் + 2,4-னு சோடியம் உப்பு 1.0 கிலோ / ஏக்கர் என்ற விகிதத்தில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கரும்பு நடவு செய்த 21ம் நாள் தெளிக்கவும்.
  3. ஒட்டுண்ணி வகை களைச் செடியான சுடுமல்லி காணப்படும் இடங்களில் 2,4-னு சோடியம் உப்பினை ஏக்கருக்கு 0.5 கிலோ அளவில் 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும். கரும்புப் பயிருக்கு அருகில் பருத்தி மற்றும் வெண்டை போன்ற பயிர்கள் இருந்தால் 2,4-னு சோடியம் உப்பு தெளித்தலை தவிர்க்கவும். 20 சத யூரியா கரைசலை சுடுமல்லி களையின் மேல் மட்டும் படுமாறு தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.
  4. கரும்பு நடவிற்கு 21 நாள் முன்னர் கிளைபோசேட் களைக்கொல்லியை 0.8 கிலோ ஃஏக்கர் என்ற அளவில் 2 சத அமோனியம் சல்பேட் உரம் சேர்த்து கோரை களைகளின் மேல் தெளித்து பின்னர் கரும்பு நடவு செய்த 30ம் நாள் கிளைபோசேட் 800 கிராம்/ஏக்கர் + 2 சத அமோனியம் சல்பேட் கரைசலை மறைப்பான் பொருத்தப்பட்ட கைத்தெளிப்பான் கொண்டு கோரை களைச் செடிகளின் மேல் தெளிப்பதன் மூலம் கோரை களையினை கட்டுப்படுத்தலாம்.
  5. களைக்கொல்லிகள் பயன்படுத்த இயலாத சூழ்நிலைகளில் ஜூனியர் கலப்பை கொண்டு சால்மேடுகளில் கரும்பு நட்ட 25, 55 மற்றும் 85 நாட்களில் இடையுழவு செய்வதன் மூலமாகவும் களைகளைக் கட்டுப்படுத்தலாம். கரும்புப் பயிரின் வரிசையில் உள்ள களைகளை களைகொத்து கொண்டு எடுக்க வேண்டும். இல்லாவிடில் பவர்டில்லரில் பொருத்தப்பட்ட இரும்பு கொழு கலப்பை கொண்டு இடை உழவு செய்ய வேண்டும்.

6. ஊடு பயிர் பயிரிட்ட கரும்பு வயலில் களை நிர்வாகம் : சோயா மொச்சை, உளுந்து மற்றும் மணிலா போன்ற ஊடு பயிர் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு வயல்களில் களைகள் முளைக்கும் முன் தெளிக்கக்கூடிய களைக்கொல்லியான தயோபென்கார்ப் 0.5 கிலோ / ஏக்கர் என்ற அளவில் தெளிக்கலாம்.

Spread the love