June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம்

புதுக்கோட்டை, ஜூன் 11

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டாரம் கும்மங்குடி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2022-2023 நுண்ணீர் பாசனம் மற்றும் உர மேலாண்மை என்ற தலைப்பில் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு திட்ட இயக்குநர்-அட்மா/வேளாண்மை இணை இயக்குநருமான இரா.சிவக்குமார் தலைமை வகித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ரெங்கசாமி, அனைவரையும் வரவேற்று பயிற்சி குறித்து முன்னுரை வழங்கினார். வேளாண் பொறியியல் துறையின் உதவி பொறியாளர் கண்ணன், கலந்து கொண்டு நுண்ணீர் பாசன முறைகளான சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் மற்றும் மழைத்தூவான் போன்றவற்றின் அமைப்புகள் குறித்தும், நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான காரணிகளான நில அமைப்பு, தண்ணீரின் அளவு, தண்ணீரின் தரம் பற்றியும், உபகரணங்களின் பயன்பாடு குறித்தும் விளக்கமளித்தார். மேலும் சொட்டு நீர் பாசனத்தில் பயன்படுத்தக்கூடிய உரங்கள், அவற்றின் அளவு முறைகள், நீரில் கரையும் உரங்கள் மற்றும் நன்மைகள் மற்றும் நுண்ணீர் பாசன கருவிகளின் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தொழில்நுட்ப துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சுவேதா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சங்கீதா, மற்றும் முருகன் ஆகியோர் செய்திருந்து கலந்து கொண்டார்.

Spread the love