August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமத்தில் அட்மா பயிற்சி

புதுக்கோட்டை, ஜூலை 8

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் (அட்மா) கீழ் 2022-2023 ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு என்ற தலைப்பில் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி சாட்டியக்குடியில் நடைபெற்றது. பயிற்சியில் பங்கேற்று பேசிய செ.முல்லை, துணை வேளாண்மை அலுவலர், வேளாண்மை – உழவர் நலத்துறையின் கீழ் ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் திட்டங்கள்¸ மானிய விபரங்கள் வேளாண்மை கிடங்கில் உள்ள நுண்சத்து¸உயிர் உரங்கள் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்.

மணமேல்குடி மீன்வள ஆய்வாளர் N.அர்த்தீஸ்வரன் மற்றும் கிருஷ்ணகுமார் மீன்வள மேற்பார்வையாளர், கோட்டைப்பட்டிணம் கலந்துகொண்டு தொழில்நுட்ப கருத்துக்களை வழங்கினார்கள். ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பில் இரண்டு முறைகள் உள்ளன 1.வேளாண் பயிர் செய்தல்- மீன் வளர்ப்பு 2.கால்நடை வளர்ப்பு – மீன் வளர்ப்பு.

ஆவுடையார்கோவில் வட்டாரம் மானாவாரி பாசனத்தை சார்ந்து உள்ளதால் ஒரு போகம் விவசாயம் செய்து வருவதால் நெல் விதைத்த 5 நாட்களுக்கு பிறகு நுண் மீன் குஞ்சுகளை ஏக்கருக்கு 2500 எண்ணிக்கையில் வயலினுள் விட வேண்டும்.போதிய அளவு மிதவை தாவரங்கள் இருப்பின் மீன்களுக்கு சரியான உணவு கிடைக்கும். பூச்சி தொல்லையை கட்டுப்படுத்த புயூரான் 1 ஹெக்டேருக்கு 1 கிலோ என்ற விதத்தில் அளிக்கலாம்.அதை அடி உரத்துடன் கலந்து இட்டு பின் நிலத்தை சமப்படுத்தி விடவேண்டும். மீன் குஞ்சுகளை வயலில் விட்ட பின் 10 வாரங்களுக்கு பின்பும் விரலளவு மீன் குஞ்சுகளாக இருப்பின் 6 வாரங்களுக்கு பிறகு நீரை வடித்துவிட்டு பின் அறுவடை செய்ய வேண்டும். நெற்பயிரை அறுவடை செய்வதற்கு 1 வாரத்திற்கு முன்பு மீன்களை சேகரித்து விட வேண்டும்.இம்முறை வளர்ப்பில் ஒவ்வொரு மீனும் 60 கிராம் எடையுடன் ஏக்கருக்கு 250 கிலோ வரை கிடைக்கும். இவ்வாறு ஒருங்கிணைத்து செய்யும்போது வளங்கள் நன்கு பயன்படுத்தப்படுவதோடு இரட்டிப்பு இலாபம் அடையலாம். மேலும் பண்ணைக்குட்டைகள் அமைத்து மீன் வளர்த்து பயனடையுமாறு கூறினார்கள். பயிற்சியின் முடிவில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு ஆய்வாளர் மற்றும் மேற்பார்வையாளர் விளக்கமளித்தார்கள். இப்பயிற்சியை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சு.மகேஸ்வரி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் மு.வீரமணி ஏற்பாடு செய்திருந்தார்கள். மேற்கண்ட செய்திகுறிப்பினை ச.கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ஆவுடையார்கோவில் தமது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்கள்.

Spread the love